'மகாபாரத போராவது, 18 நாட்களில் முடிந்தது; இவர்களது வார்த்தைப் போர், எப்போது முடியுமோ தெரியவில்லையே' என, மேற்கு வங்க முதல்வர் மம்தாவையும், கவர்னர் ஜக்தீப் தன்காரையும் பற்றி, ஒருவித எரிச்சலுடன் கூறுகின்றனர், அந்த மாநில மக்கள்.
மத்திய அரசு மீது துவக்கத்தில் இருந்தே, கடும் கோபத்தில் இருந்த, திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கு, ஜக்தீப்பை கவர்னராக நியமித்ததும், கோபம் மேலும் அதிகரித்து விட்டது. கவர்னர் என்றும் பாராமல், அவர் செல்லுமிடமெல்லாம், திரிணமுல் கட்சியினரை வைத்து, அவமானப்படுத்தினார் மம்தா. கவர்னர், தன் பங்கிற்கு மம்தாவை வெறுப்பேற்றினார்.
மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், இவர்களது மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. 'மேற்கு வங்கத்தில் சட்டம் - ஒழுங்கு மோசமடைந்துள்ளது. ஆட்சியை கலைக்க வேண்டியது தான். மத்திய படைகளை உடனடியாக குவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்' என, முழங்கினார் ஜக்தீப்.
மம்தா, இவருக்கு சளைத்தவரா என்ன... 'முடிந்தால் ஆட்சியை கலைத்துப் பாருங்கள். மீண்டும், மிக அதிக பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்து, என்னை எதிர்ப்பவர்கள் முகங்களில் கரியைப் பூசுவேன்' என, பதிலுக்கு பாய்ந்தார்.
இவற்றையெல்லாம் வேடிக்கை பார்க்கும், மேற்கு வங்க மாநில மக்கள், 'இவர்கள் போடும் சண்டையால், மாநிலத்தில் எல்லா பணிகளும் முடங்கி கிடக்கின்றன. தேர்தல் வரட்டும்; நாங்கள் யார் என்பதை காட்டுகிறோம்' என, கடுப்புடன் காத்திருக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE