பொள்ளாச்சி:தொற்று பரவல் காலத்தில், குறைக்கப்பட்ட சேலை நெசவு கூலியை, மீண்டும் உயர்த்தித்தர வேண்டும் என, கைத்தறி மற்றும் பட்டு நெசவாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.பொள்ளாச்சி நெகமம், காட்டம்பட்டி, வீதம்பட்டி, ஜலத்துார் பகுதியில், கைத்தறி சேலை ரகங்கள் அதிகளவில் உற்பத்தியாகின்றன. குறிப்பாக, ஜலத்துார் பகுதியில், பட்டு நெசவு அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. சாதா பட்டு, வேலைப்பாடுகள் நிறைந்த ஜக்கார்ட் ரகம், 'பீம்' ரக சேலைகள் அதிகளவு தயாரிக்கப்படுகின்றன. இங்கு தயாராகும் சேலை ரகங்கள் பெரும்பாலும் ஆந்திரா, கேரளா மாநிலங்களிலும், கோவையிலும் விற்பனையாகின்றன. கடந்த, 9 மாதங்களுக்கு முன் கொரோனா பரவல் தீவிரமடைந்ததால், நெசவாளர்களுக்கு நுால் கிடைக்காத நிலை ஏற்பட்டு, நெசவு தொழில் முற்றிலும் முடங்கியது.வேலை இழந்த தொழிலாளர்கள், தோட்ட வேலை, நார் உற்பத்தி, தேங்காய் உரிப்பு மற்றும் காய்கறி விற்பனை பணிகளுக்கு சென்று, தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாத்தனர். தனியார் உற்பத்தியாளர்கள் தங்களிடம் இருந்த நுால் இருப்பை, ஒரு சில நெசவாளர்களுக்கு மட்டுமே நுால் வழங்கி, சேலை உற்பத்தி தடைபடாமல் பார்த்துக்கொண்டனர்.இருப்பினும், உற்பத்தி செய்யப்பட்ட சேலை ரகங்களை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. வியாபாரமும் முடங்கிய நிலையில், வேறு வழியின்றி உற்பத்தி செய்யப்படும் சேலை ரகங்களுக்கு கூலி குறைக்கப்பட்டது. சேலைகளின் விலையும் குறைந்தது.இதன்படி, 1,300 ரூபாய் கூலி வழங்கப்பட்ட, 'பை' ரக பட்டு சேலைகளுக்கு, 400 ரூபாய் குறைக்கப்பட்டு, 900 ரூபாய் மட்டுமே கூலியாக வழங்கப்பட்டது.ஜக்கார்ட் ரக பட்டுகளுக்கு, 500 - 600 ரூபாய், பீம் ரக சேலைகளுக்கு, 450 ரூபாய், கைத்தறி சேலைக்கு ரகத்துக்கேற்ப, 200 - 400 ரூபாய் வரை கூலி குறைக்கப்பட்டது.இச்சம்பளம், கடந்த, 9 மாதங்களாக நடைமுறையில் உள்ளது. கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக, நெசவுத்தொழில் சூடுபிடித்துள்ளது. நெசவாளர்களும், இரண்டு நாளைக்கு ஒரு சேலையை நெசவு மேற்கொண்டு, உற்பத்தியாளர்களுக்கு வழங்கி வருகின்றனர். இச்சூழலில், குறைக்கப்பட்ட கூலியை, குடும்ப சூழ்நிலை மற்றும் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு மீண்டும் உயர்த்தி தர வேண்டும் என, உற்பத்தியாளர்களிடம் நெசவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.பொதுவாக, குறைக்கப்பட்ட கூலியை உடனடியாக உயர்த்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நெசவாளர்களிடையே அதிகரித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE