மடத்துக்குளம்:மடத்துக்குளத்தில் நடக்கும் வாரச்சந்தையை இடமாற்றம் செய்ய வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.மடத்துக்குளத்தில் வாரத்தில் சனிக்கிழமை தோறும் நடக்கும் சந்தையில், நுாற்றுக்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்படுகின்றன. காலை துவங்கி மாலை வரை நடக்கும் இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காய்கறி வாங்கிச்செல்கின்றனர். பேரூராட்சி அலுவலகத்தின் பின்பும், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்புள்ள காலியிடத்தில் சந்தை நடக்கிறது.இந்தப்பகுதியில் கடை அமைக்க இடம் இல்லாதவர்கள், தேசிய நெடுஞ்சாலை ஓரம் கடைகள் அமைத்து விற்பனையில் ஈடுபடுகின்றனர். போதிய இடவசதி இல்லாத காரணத்தால், இந்த இடம் மிகவும் நெருக்கடியாக உள்ளது.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விபத்துக்கள் நடக்கும் அபாயமும் உள்ளது. தற்போது போதிய கட்டமைப்பு வசதிகள் இன்றி, திறந்தவெளியில் கடைகள் நடத்தப்படுகின்றன. இதற்குத்தீர்வாக வேறு இடம் தேர்வு செய்து, அந்த இடத்தில் சந்தை கட்டமைப்பு உருவாக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE