'உண்மை தான். மத்தியில், ஊழல் தவிர வேறு ஒன்றும் செய்யாததால் தான்,
காங்கிரசை வீட்டுக்கு அனுப்பி விட்டனரோ...' என, கிண்டலாக கேட்கத் தோன்றும்
வகையில், சிவகங்கை தொகுதி காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம் பேட்டி:
சரித்திரத்தில் சாதனை படைத்தவர்கள், புகழ் பெற்றவர்களை பற்றி பேசி,
நிகழ்கால தேர்தலில் ஓட்டுகளை பெற முடியாது. அடுத்த, ஐந்தாண்டுகளில் என்ன
செய்யப் போகிறோம், என்று கூறினால் தான், ஓட்டுகளை பெற முடியும்.
'எந்த கணிப்பில், எந்த எண்ணத்தில், அ.தி.மு.க., - தி.மு.க., கட்சிகள் ஆட்சிக்கு வரத் துடிக்கின்றனவோ, அதன்படி தான், ரஜினியும் வருகிறார்; எல்லாம், 'மக்கள்' சேவைக்காகத் தான்...' என, கிண்டலாக கூறத் தோன்றும் வகையில், மாநில திட்டக்குழு துணைத்தலைவரும், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சருமான பொன்னையன் பேட்டி: அரசியலுக்கு வருவது பற்றி நடிகர் ரஜினி, 20 ஆண்டுகளாக சொல்லி வருகிறார். அவரிடம் இருந்த ரசிகர்கள், பல அரசியல் கட்சிகளில் சேர்ந்துவிட்டனர். எந்த கணிப்பில் அவர், அரசியலுக்கு வருகிறார் என்பது, அவருக்குத் தான் தெரியும்.
'எதிர்க்கட்சிகள் பிரசாரம், உங்களின் சமாளிப்பு பிரசாரத்தை துாக்கி சாப்பிட்டு விடும் போலிருக்கிறதே...' என, கவலை தெரிவிக்கத் தோன்றும் வகையில், பா.ஜ., மாநில துணைத்தலைவர் நரேந்திரன் பேட்டி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தவறான பிரசாரங்கள் நடக்கின்றன. விவசாயிகள் மற்றும் மக்களுக்கு இடையே உள்ள கமிஷன் ஏஜன்டுகள், பொய் பிரசாரம் செய்கின்றனர். இதனால் விவசாயிகள் குழப்பத்தில் உள்ளனர். இதை தீர்ப்பதற்காக தமிழகத்தில், 1,000 இடங்களில் விவசாயிகளை சந்தித்து, வேளாண் சட்டங்களின் உண்மை நிலை குறித்து தெரிவிக்க உள்ளோம்.
'எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெ., பேசிய சினிமா வசனங்களைத் தானே, உங்கள் கட்சியில் நிறைய பேர் இன்னமும் உண்மை என நம்பிக் கொண்டிருக்கின்றனர்...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக கூட்டுவுத்துறை அமைச்சர் ராஜு பேட்டி: ம.நீ.ம., தலைவர் கமலுக்கு அரசின் நிதி, நிர்வாகம் குறித்து தெரியாது. அவர் இன்றும் சினிமா வசனங்களை தான் பேசி வருகிறார். அவர் அரசியல் தலைவர் இல்லை; நடிகர் மட்டுமே.
'காங்., திருத்திய சட்டங்களைத் தான், பா.ஜ., செயல்படுத்துகிறது என்றால், பா.ஜ.,வுக்கு சொந்த மூளை இல்லையா...' என, கேட்கத் தோன்றும் வகையில், இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்க தலைவரும், தி.மு.க., முன்னாள் எம்.பி.,யுமான ராமலிங்கம் அறிக்கை: வேளாண் சட்டங்களை திருத்துவதற்கான விதையை விதைத்ததே காங்கிரஸ் தான். காரணகர்த்தாவாக இருந்த காங்கிரசை சுட்டிக் காட்டாமல், பா.ஜ., மோடி என்று, தி.மு.க., பேசுவதிலிருந்தே தெரிகிறது, இது தனிப்பட்ட அரசியல் ஆதாயங்களுக்கு மட்டுமே.
'செய்வோம் என சொல்லி ஆட்சிக்கு வந்த, தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் செய்தனரா...' என, கிடுக்கி போடும் வகையில், பா.ஜ., தேசிய முன்னாள் செயலர் எச்.ராஜா பேட்டி: ரஜினி மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றால், கமல் ஹாசனும் இதுவரை எதுவும் செய்யவில்லை. கமல் அரசியலுக்கு வருவதற்கு உரிமை இருக்கிறது என்றால், ரஜினிக்கும் உரிமை உள்ளது.
'புயல்கள் தான் தொடர்ந்து வருகின்றனவே... அதற்காக கையிருப்பில் வைத்திருப்பர்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக காங்., செயல் தலைவர் விஷ்ணுபிரசாத் பேட்டி: 2019ல், 'கஜா' புயலின் போது, ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு, 2,000 ரூபாய் வழங்கப்படும்' என, முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்தார். இடைத் தேர்தலால், கோர்ட் உத்தரவுபடி செயல்படுத்தப்படவில்லை. அதற்காக ஒதுக்கப்பட்ட, 1,200 கோடி ரூபாய் என்ன ஆனது என்று தெரியவில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE