பரண் அமைத்து விளைநிலங்களில் காவல் திரும்பும் பழமை!காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த திணறல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பரண் அமைத்து விளைநிலங்களில் காவல் திரும்பும் பழமை!காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த திணறல்

Added : டிச 21, 2020
Share
உடுமலை:காட்டுப்பன்றிகள் பெருகி, நெல் வயல்களையும், பயிர்களையும் நாசம் செய்து வருகின்றன. இதனால், மீண்டும் பழைய முறைப்படி, வயல்களில் பரண் அமைத்தும், ஒலி எழுப்பியும், பட்டாசு வெடித்தும், இரவு முழுவதும் விவசாயிகள் காவல் காத்து வருகின்றனர்.உடுமலை, அமராவதி வன எல்லையை ஒட்டிய கிராமங்கள் மட்டுமின்றி, 60 கி.மீ., துாரம் வரை உள்ள கிராமப்பகுதிகளிலும், காட்டுப்பன்றிகள் அதிகளவு உலா

உடுமலை:காட்டுப்பன்றிகள் பெருகி, நெல் வயல்களையும், பயிர்களையும் நாசம் செய்து வருகின்றன. இதனால், மீண்டும் பழைய முறைப்படி, வயல்களில் பரண் அமைத்தும், ஒலி எழுப்பியும், பட்டாசு வெடித்தும், இரவு முழுவதும் விவசாயிகள் காவல் காத்து வருகின்றனர்.உடுமலை, அமராவதி வன எல்லையை ஒட்டிய கிராமங்கள் மட்டுமின்றி, 60 கி.மீ., துாரம் வரை உள்ள கிராமப்பகுதிகளிலும், காட்டுப்பன்றிகள் அதிகளவு உலா வருகின்றன. ஆறு, ஓடை புதர்களில் வசிக்கும் அவை, இரவு நேரங்களில் சாகுபடி நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன.
மக்காச்சோளம், வாழை, தென்னை, காய்கறி பயிர்களை உணவாக கொள்வது குறைவாக இருந்தாலும், கூட்டம், கூட்டமாக விளை நிலங்களுக்குள் புகுந்து வருவதால், அதிகளவு பயிர்கள் அழிந்து வருகின்றன.காட்டுப்பன்றிகளால் கடும் பாதிப்பு ஏற்பட்டதால், 60க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், கடந்தாண்டு, டிச.,17 ல், வனத்துறை அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் பேச்சு வார்த்தையில், ''காட்டுப்பன்றிகளை வன விலங்குகள் பட்டியலிலிருந்து நீக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். விளை நிலங்களுக்குள் புகும், காட்டுப்பன்றிகளை விரட்ட விவசாயிகளுக்கு உரிமை உண்டு. பாதிப்புகளுக்கு உடனடி இழப்பீடு,'' என பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. ஆனால், ஒரு ஆண்டாகியும் தீர்வு எட்டப்படவில்லை.பழைய முறைஅமராவதி பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளில், 6,500 ஏக்கர் பரப்பளவில், நெல் சாகுபடி செய்யப்பட்டு, 20 நாட்களில் அறுவடைக்கு வரும் நிலையில், நெற் பயிர்கள் உள்ளன. அமராவதி, வேல்நகர், பூச்சிமேடு, பூளவாடி என அனைத்து பகுதிகளிலும், காட்டுப்பன்றிகள் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. 20 முதல் 50 பன்றிகள் வரை, கூட்டம், கூட்டமாக நெல் வயல்களுக்குள் புகுந்து, பால் பிடித்த கதிர்களை அழித்து வருகின்றன.
பயிர்களை காக்க, வண்ண சேலைகள், மின்னும் 'டொய்ன்' கட்டி, வயல்களில் பரண் அமைத்து, இரவு நேரங்களில் அதிக ஒளி உடைய விளக்குகளை பிடித்து கண்காணித்து வருகின்றனர்.பாத்திரம், தகரம் ஆகியவற்றின் மூலம் ஒலி எழுப்பியும், பட்டாசுகள் வெடித்தும், காவல் பணியில் இரவு முழுவதும், கண்விழித்து பயிர்களை காத்து வருகின்றனர்.விவசாயிகள் கூறியதாவது : பழங்காலத்தில், அறுவடை பருவத்திலுள்ள பயிர்களை, வன விலங்குகளிலிருந்து காக்க, இசைக்கருவிகள் இசைத்தும், பட்டாசு வெடித்தும் காக்கும் சூழல் இருந்தது. தற்போது, கூட்டம், கூட்டமாக படையெடுத்து வரும் காட்டுப்பன்றிகளை காக்க, மீண்டும் பரண் அமைத்து, இரவு முழுவதும் காக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வனப்பகுதியிலிருந்து வெளியேறும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தவும், வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.
சேதம் அதிகரிப்பு
அமராவதி அணையிலிருந்து பாசனத்திற்கு தாமதமாக நீர் திறக்கப்பட்டதால், நெற்பயிர்கள் பால் பிடிக்கும் சமயத்தில், கன மழை பெய்தது. இதனால், நெல் மணிகள் பிடிக்காமல், வெறும் கருக்காயாக மாறியுள்ளது. வழக்கமாக, ஏக்கருக்கு, 60 கிலோ கொண்ட, 45 மூட்டை வரை மகசூல் இருக்கும் நிலையில், 30 சதவீதம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், காட்டுப்பன்றிகளும் அழித்து வருவதால், அமராவதி பழைய ஆயக்கட்டு பகுதிகளில் நெல் சாகுபடி செய்த விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X