உடுமலை:திருமூர்த்திமலை வண்ண மீன் காட்சியகம் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.உடுமலை அருகேயுள்ள, திருமூர்த்திமலை மேல், 960 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள, பஞ்சலிங்கம் அருவி, பாலாற்றின் கரையில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஒருங்கே எழுந்தருளியுள்ள, அமணலிங்கேஸ்வரர் கோவில், நீச்சல் குளம் என சுற்றுலா மையமாக உள்ளது.திருமூர்த்தி அணை, படகுத்துறை அருகே, 2004ல், மீன் வளர்ச்சி கழகம் சார்பில், வண்ண மீன் காட்சியகம் அமைக்கப்பட்டது. இங்கு, கோல்டன் பிஷ், கவுரா, சிக்லெட்ஸ், கப்பிஸ், இந்தியன் காட் பிஷ், பிளவர் பாண்ட் பிஷ், பெதர் பின், டெட்ராஸ், கம்பூசியா, ஆஸ்கர் உள்ளிட்ட மீன் ரகங்கள், கண்ணாடித்தொட்டியில் காட்சிக்கு வைக்கப்பட்டன. துவக்கப்பட்ட போது, மீன்களின் குணாதிசயங்கள் குறித்த தகவல்கள், மீன் தொட்டி அருகே வைக்கப்பட்டன.காட்சியகத்தை பார்வையிட்டு, தங்களுக்கு பிடித்தமான மீன் ரகங்களை வாங்கிச்செல்வதற்கான வசதிகளையும், மீன் வளர்ச்சிக்கழகம் செய்தது. ஆனால், தொடர்ந்து, வண்ண மீன் காட்சியகம் பராமரிக்கப்படாமல், பொலிவிழந்து காணப்பட்டது. இதனை புதுப்பிக்க பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தற்போது புதுப்பிக்கும் பணி நடக்கிறது. சேதமடைந்து காணப்பட்ட மேற்கூரை, உட்பகுதிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அதிகாரிகள் கூறுகையில், 'வண்ண மீன் காட்சியகம் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. மீன் தொட்டிகள் புதுப்பிக்கப்பட்டு, புதிய ரக மீன்கள் காட்சிக்கு வைக்கப்படும்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE