அன்னூர்:'திண்ணைப் பிரசாரம் செய்ய வேண்டும்' என அன்னூரில் நடந்த கூட்டத்தில், அமைச்சர் வேலுமணி பேசினார்.அவிநாசி தொகுதி அளவில், அ.தி.மு.க., ஆலோசனைக் கூட்டம் அன்னூரில் நடந்தது. கோவை வடக்கு மாவட்ட செயலாளர் அருண்குமார் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார்.அமைச்சர் வேலுமணி பேசுகையில், ''அவிநாசி தொகுதியில், சட்டசபை தேர்தலில், 30 ஆயிரம் ஓட்டுக்கள் அதிகம் பெற்றோம். எம்.பி., தேர்தலில், 17 ஆயிரம் குறைவாக பெற்று உள்ளோம். எனவே, தேர்தல் பணியை தீவிரப்படுத்த வேண்டும். திண்ணைப் பிரசாரம் செய்ய வேண்டும்.''உள்ளாட்சி தேர்தலில் வீடு, வீடாக, தோட்டம், தோட்டமாக, சென்று ஆதரவு திரட்டியதுபோல் சட்டசபை தேர்தலுக்கும் செய்ய வேண்டும். ஓட்டுச்சாவடி குழு அமைத்து, குரூப் போட்டோ எடுத்து வரும், 23ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்,'' என்றார்.சாய் செந்தில் வரவேற்றார். அம்பாள் பழனிசாமி நன்றி கூறினார். இளைஞரணி நிர்வாகி அமுல் கந்தசாமி, இணைச் செயலாளர் சித்ரா, மாணவரணி நிர்வாகி கோகுல்குமார், பாசறை மாவட்ட செயலாளர் வசந்த் உள்பட பலர் பங்கேற்றனர்.அமைச்சர் வேலுமணி நிருபர்களிடம் கூறுகையில், ''ஸ்டாலின் அறைக்குள் அமர்ந்து கொண்டு அரசியல் செய்கிறார். முதல்வர் பழனிசாமி மக்களை நேரில் சந்தித்து, உதவி வழங்குகிறார்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE