பெ.நா.பாளையம்:'இயற்கை உரங்களின் உற்பத்தியை அதிகரித்து, விவசாயிகளுக்கு வினியோகம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று, தோட்டக்கலைத்துறை இயக்குனர் சுப்பையன், அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்திற்குட்பட்ட ஆனைகட்டியில் அரசு தோட்டக்கலை பண்ணை உள்ளது. இப்பண்ணையில் பராமரிக்கப்பட்டு வரும் கொய்யா, மா, எலுமிச்சை செடிகளை தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் சுப்பையன் ஆய்வு செய்தார்.பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்டு வரும் மண்புழு உரங்கள், பஞ்சகாவியா ஆகிய இயற்கை உரங்களின், உற்பத்தியை அதிகரித்து, விவசாயிகளுக்கு வினியோகம் செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கினார். பண்ணையில் தேனீ வளர்ப்பை அதிகப்படுத்த, பண்ணை முழுவதும் தேனீ பெட்டிகளை வைத்து பராமரித்து, இயற்கையில் கிடைக்கும் தேனை பொதுமக்களுக்கு விற்பனை செய்யவும், இனி வரும் நிதியாண்டில் பயனாளிகளுக்கு தேனீ பெட்டிகளை வழங்குமாறு அறிவுறுத்தினார்.தேனீக்களை வளர்த்து, அவற்றின் மூலம் யானை தொந்தரவை தவிர்க்கலாம் என்ற அவர், சூரிய ஒளியின் வாயிலாக இயங்கும் சோலார் டிரையர் நிறுவப்பட்டு இருப்பதையும் பார்வையிட்டார். இதை பயன்படுத்தி, பண்ணையில் விளையும் பொருள்களான நெல்லிக்கனிகளை காயவைத்து மிட்டாய் மற்றும் காய்கறிகளில் வற்றல் செய்து விற்பனை செய்யவும் அறிவுரை வழங்கினார்.மண்ணுக்கு ஏற்றவாறு கருவேப்பிலை, அவகோடா, முள்சீதா மற்றும் இதர பழ மரங்களை உற்பத்தி செய்யுமாறு கூறினார். தோட்டக்கலை துறைக்கு கலெக்டரால் தூவைப்பதி கிராமத்தில் புதியதாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள, 15 ஏக்கர் நிலத்தை பார்வையிட்டு, அதில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அறிவுரை வழங்கினார். ஆய்வில், தோட்டக்கலை துணை இயக்குனர் புவனேஸ்வரி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE