சிங்கம்புணரி : சிங்கம்புணரி பகுதியில் அரசு கட்டடங்களில் நடக்கும் மராமத்து பணிகள் கண்துடைப்புக்காக நடப்பதால் அரசு நிதியும், கட்டடங்களும் வீணாகி வருவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இப்பகுதியில் கடந்த 25 ஆண்டுகளில் பள்ளி கட்டடங்கள் உள்ளிட்ட பல அரசு கட்டடங்கள் தரம் குறைவாக கட்டப்பட்டதால் அவற்றில் பல சிதிலமடைந்து மழைநீர் ஒழுகுகிறது. முறையாக அமைக்கப்படாத, பராமரிக்கப்படாத மேல்தளத்தில் குப்பைகளும், மழைநீரும் தேங்கி கட்டடங்களை வீணாக்கி வருகிறது. இது குறித்து புகார் வரும் போது மட்டும் அதிகாரிகள் கண்துடைப்புக்காக வர்ணங்களை பூசிவிட்டு, கட்டடங்களின் விரிசல்கள், ஓட்டைகளை சரிசெய்யாமல் விட்டுவிடுகின்றனர்.
சுவற்றில் வளர்ந்துள்ள செடிகளை கூட அகற்றாமல் வர்ணம் பூசுகின்றனர். இதனால் செலவழிக்கப்பட்ட நிதியால் எந்தப்பயனும் இல்லாமல் நிதி வீணாவதுடன், கட்டடமும் தனது கடைசி நாட்களை எண்ணவேண்டியுள்ளது. சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் 50 ஆண்டு கால கட்டடம் சிதிலமடைந்து வரும் நிலையில் அதன் ஒரு பகுதியை இந்த அடிப்படையில் தான் அதிகாரிகள் சீரமைத்து, தற்போது மீண்டும் அதில் செடிகள் வளர்ந்துவருகிறது. எனவே இருக்கும் கட்டடங்களின் ஆயுளை குறைந்தபட்சமாவது நீட்டிக்க அவற்றை முறையாக பழுதுபார்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE