வத்தலக்குண்டு : உலக வங்கி நிதி உதவியுடன் துவங்கி, நின்றுபோன கிளை வாய்க்கால் பணிகளை மீண்டும் துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
மதுரை, சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்காக 1981ல் பெரியாறு வைகை பிரதான கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டது. முதல் நிலையில் 10 ஆயிரத்து 305 எக்டேர் நிலம் பயனடையும் வகையில், ரூ 44.5 கோடியில் உலக வங்கி நிதியுடன் நடந்தது. பணிகள் முடியும் போது கூடுதலாக 7520 எக்டேர் மறைமுகமாக பயனடையும் வகையில் ரூ.56.85 கோடி இரண்டாம் கட்டமாக நிதியை ஒதுக்கியது.
12 ஷட்டர்களுடன் கிளை வாய்க்கால்
இதற்கான பணிகள் சிவகங்கை மாவட்டத்தில் நடந்தது. அப்போது, எங்கள் மாவட்டத்தை கடந்து தண்ணீர் செல்வதால் எங்களுக்கும் தண்ணீர் வேண்டுமென விராலிப்பட்டி பகுதி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வாய்க்கால்கள் அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கேட்டதால் ரூ.70 கோடியில் பணி திருத்தி அமைக்கப்பட்டது. இதையடுத்து பெரியாறு பிரதான கால்வாயில் தேனி மாவட்டம் ஏ.வாடிப்பட்டி முதல் திண்டுக்கல் அணைப்பட்டி வரை 12 ஷட்டர்கள் அமைத்து கிளை வாய்க்கால் அமைக்க ரூ.33.2 கோடியில் பணிகள் நடந்தன.
நிலக்கோட்டை தாலுகாவில் 4,000 ஏக்கர் பாசன வசதி பெறும் என மதிப்பீடு செய்யப்பட்டது. முதல் ஷட்டரில் விராலிப்பட்டி பகுதியில் 500 ஏக்கர், இரண்டாவது கதவணை தேனி மாவட்டம் வாடிப்பட்டி, 3வது கதவணை பூவம்பட்டி கன்னிமார்கோயில்பட்டி பகுதியில் உள்ள 300 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் அளவுக்கு அமைக்கப்பட்டது.இடம் பெயர்ந்த விவசாயிகள்முதல் கதவணையில் 14 கி.மீ., கிளை வாய்க்கால் அமைக்க முடிவு செய்து 7 கி.மீ.,க்கு தோண்டப்பட்டு, நிதி இல்லாமல் பணி நின்று போனது.
விவசாயிகளும் பல கட்ட போராட்டங்களை அறிவித்து பணியை தொடங்க வலியுறுத்தினர். அடுத்தடுத்து வந்த அரசுகள் அதனை கிடப்பில் போட்டன. கிளை வாய்க்கால் இல்லாததால் இப்பகுதி நிலங்கள் தரிசாக மாறின.இதனால் பெரும்பாலான விவசாயிகள், சோலார் மின்சாரம் தயாரிக்கும் தனியாரிடம் நிலத்தை விற்று வருகின்றனர். பலர் பிழைப்பு தேடி திருப்பூர், கோவை, கேரளாவிற்கு இடம்பெயர்ந்து விட்டனர். 14 கி.மீ.,க்கு கிளை கால்வாய் வெட்டி பெரியாறு பாசன கால்வாயில் தண்ணீர் திறந்து விட்டால் இப்பகுதியில் விவசாயம் செழிக்கும்.
பொய் அறிக்கை சமர்ப்பிப்பு
1992ல் இப்பிரச்சனைக்காக குரல் கொடுத்த விவசாயி ராமசாமி கூறியதாவது:இத்திட்டத்தில் அடுத்தடுத்து வந்த அரசுகள், பொதுப்பணித் துறையினர் ஆர்வம் காட்டவில்லை. தற்போது பொதுப்பணித்துறையினர் 12 ஷட்டர்களும் வேலை செய்வதாக கணக்கு காட்டியுள்ளனர். ஆனால் 5 முதல் 8 வது ஷட்டர்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.கிளை வாய்க்கால் பணிகள் அனைத்தும் முடிவடைந்து பாசன வசதி பெற்று வருவதாக அரசுக்கு பொய் அறிக்கையை ஆண்டுதோறும் அனுப்பி வருகின்றனர். ஆனால் உண்மை நிலவரம் என்னவென்றால் கிளை வாய்க்கால் தூர்ந்து போய்விட்டன.
மற்ற கதவணைகள் செயல்பாட்டில் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.இடை நிறுத்தப்பட்ட கிளை வாய்க்கால் பணியை மீண்டும் துவக்கி பாசன வசதி ஏற்படுத்தி கொடுத்தால் நிலக்கோட்டை தாலுகாவில் 5 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். விவசாயிகள் வாழ்க்கைத்தரமும் உயரும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE