பூத் கமிட்டி அமைப்பு
பழநி: சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பழநி தொகுதியில் பா.ஜ., மாவட்ட தலைவர் கனகராஜ் அறிவுறுத்தலின் படி, ஒரு 'பூத்'திற்கு 10 'யூத்' என்ற பெயரில் ஒவ்வொரு பூத்திற்கும் 10 இளைஞர்கள் என மொத்தம் 320 பேர் நியமிக்கப்பட்ட உள்ளனர். விரைவில் பூத் கமிட்டி மாநாடு நடக்க உள்ளது என, இளைஞர் அணி தலைவர் வினோத்குமார் தெரிவித்தார்.
மூதாட்டி மர்மச்சாவு
வடமதுரை: அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் புறம்போக்கு நிலத்தில் பொன்னுச்சாமி என்பவர் குடிசை அமைத்து குறி சொல்லும் தொழில் செய்தார். இங்கு கடந்த ஆறு மாதங்களாக தங்கியிருந்த 65 வயது மூதாட்டி நேற்று இறந்து கிடந்தார். உடனிருந்த பொன்னுசாமியை காணவில்லை. வி.ஏ.ஓ., தேன்மொழி புகாரில் வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
ஒப்பந்த ஊழியர் பலி
கள்ளிமந்தையம்: வேடசந்துாரைச் சேர்ந்த செல்வம் கரியாம்பட்டி ஊராட்சி அலுவலகம் அருகே மின் பயனீட்டு அளவை கணக்கிட மின்கம்பத்தில் இருந்த மீட்டர் பெட்டியை திறக்க முயற்சி செய்தார்.இவருக்கு, ஊராட்சி ஒப்பந்த ஊழியர் கருப்புச்சாமி 53, உதவினார். அப்போது மின்சாரம் தாக்கியதில் கருப்புச்சாமி பலியானார். கள்ளிமந்தையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
விவசாயிகளுக்கு அஞ்சலி
திண்டுக்கல்: டில்லியில் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி நடக்கும் போராட்டத்தில் 33 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, திண்டுக்கல்லில் விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நடந்தது. அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மத்தியகுழு உறுப்பினர் சச்சிதானந்தம், சி.பி.எம்., ஒன்றிய செயலாளர் அஜய்கோஷ், நகரசெயலாளர் ஆசாத், சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் பிரபாகரன் பங்கேற்றனர்.
விவசாயி தற்கொலை
வடமதுரை: கம்பிளியம்பட்டி அடுத்த சுக்காம்பட்டியை சேர்ந்த விவசாயி 47. சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு கோடாரியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்தார்.
நீரில் மூழ்கி மாணவர் பலி
செம்பட்டி: பாளையங்கோட்டை மேற்கு தெருவை சேர்ந்த சுரேஷ்குமார் மகன் பிரேம்குமார் 13, எட்டாம் வகுப்பு படித்தார். நேற்று கிராமத்தின் அருகே உள்ள நடுக்குளத்தில் நீச்சல் அடித்து விளையாடிக்கொண்டிருந்தார். அவரது தாய் பூங்கொடி, அப்பகுதியில் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது பிரேம்குமார், குளத்தின் மதகு பகுதியில் உள்ள ஷட்டரில் சிக்கி இறந்தார். இவரது தந்தை சுரேஷ்குமார், சில வாரங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் இறந்த நிலையில் இந்த துயரம் நடந்துள்ளது.
ஆலோசனை கூட்டம்
பழநி: ரஜினி மக்கள் மன்றம் சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட துணைத் தலைவர் சிக்கந்தர், நகர செயலாளர் முருகானந்தம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் மன்ற செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE