சென்னை : ''தான் கற்ற வித்தையை, பிறருக்கும் கற்பித்த வள்ளல் தான் எழுத்தாளர் பாலகுமாரன்,'' என, எழுத்தாளர் கலாப்பிரியா பேசினார்.
எழுத்தாளர் பாலகுமாரன் இரண்டாவது ஆண்டு இலக்கிய விருது வழங்கும் விழா, நேற்று, சென்னை, தி.நகரில் நடந்தது.எழுத்தாளர் கலாப்பிரியாவுக்கு, பாலகுமாரன் விருதை வழங்கி, பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன் பேசியதாவது:எழுத்தாளர் பாலகுமாரன், 230 நாவல்கள், 100க்கும் மேற்பட்ட சிறு கதைகள், 20 படங்களுக்கு திரைக்கதைகளை எழுதியவர். என்றாலும் அவர், ராஜராஜ சோழன் பற்றி எழுதிய, 'உடையார்' நாவல் காலம் கடந்தும் நிற்கும். அவர் பல விருதுகளை பெற்றவர் என்றாலும், அவருக்கு, ஜெயேந்திர சரஸ்வதி வழங்கிய, 'எழுத்துச் சித்தர்' என்ற பட்டம், வாசகர் மனதில் என்றும் நிலைத்திருக்கும்.சென்னையில், ஆர்.எஸ்.எஸ்., அலுவலக கட்டடம், வெடி வைத்து தகர்க்கப்பட்டபோது, இரவில், தனி ஆளாக வந்து நின்று பார்த்தார். அதை நாங்கள் ஆறுதலாக உணர்ந்தோம்.
அன்று முதல், அவர் இறக்கும் வரை, மாறாத அன்புடன் பழகினார். அவர் விழாவை, அவர் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் நடத்துவது சரியல்ல. நான், அவர் பிறந்தநாள் விழாவை, ஒவ்வொரு ஆண்டும், எங்கள் 'பொற்றாமரை' இலக்கிய அமைப்பின் சார்பில் கொண்டாடுவோம். இவ்வாறு, அவர் பேசினார்.விருது பெற்ற எழுத்தாளர் கலாப்பிரியா பேசியதாவது:மூன்றாண்டுகளே வந்தாலும், இலக்கிய இதழ்களில் பெரும் சாதனையை செய்த, 'கசடதபற' இதழ் வழியாக, பாலகுமாரன் எனக்கு அறிமுகமாகி, ஒருமையில் அழைத்து, உரிமையுடன் பழகுமளவுக்கு நெருக்கமானார். மனித முயற்சியின் மறுபெயர் என்னவென்றால், நான், பாலகுமாரன் என்பேன்.
அந்தளவுக்கு, எழுத்துக்காக தன் உழைப்பை வழங்கி, அதை சந்தோஷமாக அனுபவித்தவர்.தான் கற்ற வித்தையையும், தான் பெற்ற செல்வத்தையும் பிறருக்கு வாரி வழங்கி சந்தோஷப்பட்டார். அதனால், அவர் பெற்றுக்கொண்டே இருந்தார். அவர், பலரின் வாழ்வுக்கு, தன் எழுத்தின் வழியாக மானசீக குருவாக இருந்தார். என் எழுத்துக்களை பாராட்டியதோடு, குறைகளை சுட்டிக்காட்டி அக்கறையுடன் செதுக்கினார்.அவர் பெயரால், அவரது நண்பனாகிய நான் விருது பெறுவது மகிழ்ச்சியாக உள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.நிகழ்ச்சியில், பாலகுமாரன் குடும்பத்தினர், எழுத்தாளர் ரவி சுப்ரமணியம், பொற்றாமரை அமைப்பின் ஆலோசகர் சந்திரா கோபாலன், பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.* உயர்திரு.பாஸ் அவர்கள் விருப்பம்படம்: செந்தில் விநாயகம்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE