நாமகிரிப்பேட்டை: நாமக்கல் மாவட்ட அதிகாரியின் அதிரடி உத்தரவால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர்.
கொல்லிமலையில் இருந்து உருவாகும் வாச்சக்கல் ஆறு, வரகூர்கோம்பை, ஊனந்தாங்கல், முள்ளுக்குறிச்சி, தும்பல்பட்டி வழியாக, சேலம் மாவட்டம் ஜங்கமசமுத்திரம், தம்மம்பட்டிக்கு சென்று சுவேத நதியில் கலக்கிறது. இதன் மூலம், இரு மாவட்டங்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாசன வசதி பெறுகின்றனர். கடந்தாண்டு தொடர்ந்து மழை பெய்தும், எதிர்பார்த்தபடி தண்ணீர் வரவில்லை. இதனால் இப்பகுதி விவசாயிகள், ஆற்றில் ஏதாவது உடைப்பு உள்ளதா என, சோதனை செய்ய சென்றனர். அப்போது, ஊனந்தாங்கல் ஊராட்சியில் உள்ள தடுப்பணைக்கு கீழே, 3 அடி உயரத்திற்கு இப்பகுதி விவசாயிகள் சிலர், சுவர் எழுப்பி தண்ணீரை திருப்பி விட்டிருந்தது தெரிந்தது. 60 ஏக்கர் விவசாய நிலத்திற்காக கட்டப்பட்ட தடுப்பால், கீழே ஆயிரக்கணக்கான விவசாயிகள், பொதுமக்கள் குடிநீருக்கு கூட வழியின்றி தவித்து வந்தனர். இதனால், ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த சுவரை ஆயக்கட்டு விவசாயிகள், பொதுமக்கள் இடித்து அகற்றினர். இது குறித்து கொடுத்த புகாரை, ஆர்.டி.ஓ., கோட்டை குமார் விசாரணை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம், இரு தரப்பினரும் தண்ணீர் பிரிப்பது குறித்து, அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, தண்ணீர் தேவையை தெரிந்து கொள்ள, அனுமதியின்றி வைக்கப்பட்ட தடுப்பு சுவரிலேயே, ஒரு அடி உயரத்திற்கு மணல் மூட்டையை அடுக்கி, தண்ணீரை தேக்கி பரிசோதனை செய்ய ஆர்.டி.ஓ., உத்தரவிட்டார். இந்த உத்தரவால், இரு மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது குறித்து முள்ளுக்குறிச்சி, பாலத்துக்காட்டை சேர்ந்த விவசாயி நஞ்சுண்டீஸ்வரன் கூறியதாவது: வாச்சுக்கல் ஆற்றில் தண்ணீர் வருவதை கொண்டு, நாமக்கல், சேலம் மாவட்டங்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில், நெல் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் தண்ணீரை அளப்பதற்காக, 15 நாட்கள் அடைத்துவிட்டால், ஒரு லிட்டர் தண்ணீர் கூட அதை தாண்டி வராது. இதனால், நெல் பயிர் காய்ந்து கருகி விடும் அபாயம் உள்ளது. அதேபோல், 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும். எனவே, அதிகாரிகள் நெல் வயல்களை நேரில் ஆய்வு செய்த பிறகு, மணல் மூட்டை தடுப்பு குறித்து முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE