கரூர்: கரூர் மாவட்டத்தில், மின்னாம்பள்ளி, சோமூர், வேடிச்சிபாளையம், மணவாடி மற்றம் பாலவிடுதி ஆகிய பகுதிகளில், அம்மா அம்மா மினி கிளினிக்குகளை, போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டு பேசியதாவது: முதல்கட்டமாக மின்னாம்பள்ளி, நெரூர் வடக்கு, சோமூர், ஆண்டாங்கோவில், பாலவிடுதி, மணவாடி, இரும்பூதிப்பட்டி, ஜி.உடையாப்பட்டி, நந்தனூர், பெரியவளையப்பட்டி ஆகிய பகுதிகளில், 11 அம்மா மினி கிளினிக்குகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பு படிப்பதற்கு உள்ஒதுக்கீடாக, 7.5 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆறு பேருக்கு, மருத்துவ படிப்பிற்கான இடம் கிடைத்தது. அந்த நிலை மாறி, 313 பேருக்கு மருத்துவம் படிப்பதற்கு இடம் கிடைத்துள்ளது, வரலாற்று சாதனை. கடந்த நான்கு ஆண்டுகளில் கரூர் மாவட்டத்தில், 20 ஆயிரத்து, 388 தாய்மார்களுக்கு, 2.49 கோடி ரூபாய் மதிப்பிலான அம்மா குழந்தை நலப்பரிசு பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது. 14 துணை சுகாதார நிலையங்களுக்கு, 2.54 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது. மலைக்கோவிலூர், காணியாளம்பட்டி மற்றும் வாங்கல் ஆகிய பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக உயர்த்தப்பட்டு, 3.65 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார். கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., கீதா, திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் காளியப்பன், மாவட்ட ஊராடசி துணைத்தலைவர் முத்துக்குமார், சுகாதாரத்துறை துணை இயக்குனர் சந்தோஷ்குமார், மண்மங்கலம் தாசில்தார் கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE