கரூர்: கரூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன், குறுகிய இடத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதனால், பெண் போலீசார், புகார்தாரர்கள் அவதிப்படுகின்றனர்.
கரூர் நகராட்சி அலுவலகம் அருகில், கரூர் சட்டம்-ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில், குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகம் மற்றும் கரூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் ஆகியவை செயல்பட்டு வருகிறது. இதில், கரூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் பழைய கட்டடத்தில், குறுகிய இடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு, இன்ஸ்பெக்டர் உள்பட, 15க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால், ஸ்டேஷனில் போதிய இடவசதி இல்லாமல், பெண் போலீசார் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், ஸ்டேஷனை சுற்றி போதிய வடிகால் வசதி இல்லாததால், மழைக்காலங்களில், மழைநீர் ஸ்டேஷனை சுற்றி தேங்கி விடுகிறது. இதனால், கொசுத் தொல்லையும் ஏற்படுகிறது. இதனால், இரவு நேர பணிக்கு செல்லும், பெண் போலீசார் அருகில் உள்ள சட்டம் - ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் புகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கரூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், கரூர் டவுன், வெங்கமேடு, வெள்ளியணை, பசுபதிபாளையம், வாங்கல் உள்ளிட்ட போலீஸ் சரக பகுதி களில், பெண்கள் மூலம் வரும் புகார்கள் விசாரிக்கப்படுகிறது. சில நாட்களில் இரு தரப்பை சேர்ந்த, புகார்தாரர்கள் அதிகளவில் மகளிர் ஸ்டேஷனுக்கு வருகின்றனர். அப்போது, ஸ்டேஷனில் போதிய இடம் இல்லாததால், வெளியே நிற்கும் நிலை ஏற்படுகிறது. அப்போது, இருதரப்பினருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு, கைகலப்பில் முடிகிறது. இதனால், கரூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு, புதிய கட்டடம் அல்லது அதிக நிலப்பரப்பை கொண்ட இடத்துக்கு மாற்ற, கரூர் மாவட்ட காவல் துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE