வாஷிங்டன் : அமெரிக்க பங்குச் சந்தைகளில் பட்டியலிடும் அன்னிய நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் மசோதாவுக்கு அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.
அமெரிக்க பார்லிமென்டில் அந்நிய நிறுவனங்கள் தணிக்கை சட்டம் மசோதா ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு விட்டது; இதை சட்டமாக அமல்படுத்த அதிபர் டிரம்ப் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.இந்தச் சட்டத்தின்படி அமெரிக்கப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் அந்நிய நிறுவனங்கள் அமெரிக்க அரசின் தணிக்கைக்கு உள்ளாக்கப்படும்; அந்நிய நாட்டு அரசுகளின் அதிகாரத்துக்கு உட்பட்டு செயல்படக் கூடாது. இந்த விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் பங்குச் சந்தையில் இருந்து வெளியேற்றப்படும்.
ஏற்கெனவே சீனாவுக்கு எதிராக அமெரிக்க அரசு பல்வேறு வர்த்தகத் தடை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த சட்டமும் சீன நிறுவனங்களை ஒடுக்கவே கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சீனாவின் 200க்கும் மேலான நிறுவனங்கள் அமெரிக்க பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சீனா தான் காரணம்
அமெரிக்க அரசின் முக்கிய துறைகளை குறிவைத்து பல மாதங்களாக 'சைபர்' தாக்குதல் நடந்துள்ளதை அமெரிக்க அதிகாரிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். இந்த தாக்குதலால் அமெரிக்காவின் அரசு முகமைகள் முக்கிய அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆபத்தில் இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.'இந்த தாக்குதலின் பின்னணியில் ரஷ்யா உள்ளது' என அமெரிக்கா வெளியுறவு அமைச்சர் பாம்பியோ தெரிவித்திருந்தார்.இந்நிலையில் இதுபற்றி 'டுவிட்டரில்' அதிபர் டிரம்ப் 'அமெரிக்காவில் நடந்துள்ள சைபர் தாக்குதலுக்கு பின்னணியில் ரஷ்யா இல்லை; சீனா உள்ளதாக சந்தேகிக்கிறேன். இந்த தாக்குதலால் அமெரிக்காவில் பாதிப்பும் ஏற்படவில்லை' என கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE