சாண்டியாகோ: சிலி நாட்டின் அதிபர் செபாஸ்ட்டியன் பீன்யேரா மாஸ்க் அணியாமல் ஒரு பெண்ணோடு எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் காரணமாக, அவருக்கு அந்நாட்டு அரசு சுமார் ரூ.2.57 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக அனைவரும் மாஸ்க் அணியவேண்டும் என உலக நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. மேலும், மாஸ்க் அணிவதன் அவசியத்தையும் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், கொரோனா தடுப்பு விதிகளை மீறி மாஸ்க் அணியாமல் செல்பி எடுத்துக் கொண்டதற்காக சிலி நாட்டின் அதிபர் செபாஸ்ட்டியன் பீன்யேராவிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிகழ்வு நடந்தேறியுள்ளது.

சிலி நாட்டின் அதிபர் செபாஸ்ட்டியன் பீன்யேரா. இவர், இம்மாத தொடக்கத்தில் மாஸ்க் அணியாமல் ஒரு பெண்ணோடு எடுத்துக்கொண்ட செல்பி சமூக வலைதளங்களில் வைரலானது. அதிபரே கொரோனா விதிகளை மீறியதாக சர்ச்சை எழுந்ததை அடுத்து அதற்காக செபாஸ்ட்டியன் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். மேலும், தனது வீட்டிற்கு அருகில் உள்ள கடற்கரையில் தனிமையில் நடந்து சென்றபோது ஒரு பெண் தன்னிடம் வந்து புகைப்படம் எடுக்க விருப்பம் தெரிவித்ததாகவும், தவிர்க்க முடியாமல் புகைப்படம் எடுத்ததாகவும் குறிப்பிட்டார்.
இதனையடுத்து, கொரோனா தடுப்பு விதிகளை மீறி மாஸ்க் அணியாமல் செல்பி எடுத்துக் கொண்டதற்காக அதிபர் செபாஸ்ட்டியன் பீன்யேராவுக்கு அந்நாட்டு அரசு 3,500 டாலர் அபராதம் விதித்துள்ளது. இது இந்திய மதிப்பில் 2.57 லட்சம் ரூபாய் எனக் கூறப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE