'கொரோனா ஓடிப் போய்க் கொண்டிருக்கிறது; இன்னமும், ரயில்வே துறை மாறாமல் இருக்கிறதே...' என, சொல்லத் துாண்டும் வகையில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை: பழந்தமிழ் பெயர்களில் ஓடிக் கொண்டிருந்த பொதிகை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய ரயில்கள், அந்தப் பெயர்களில் இல்லாமல், சிறப்பு ரயில்களாக இயக்கப்படுகின்றன. அதை மாற்றி, பழைய பெயர்களிலேயே இயக்க வேண்டும்.
'உண்மை தான். தி.மு.க., உட்பட எந்தக் கட்சியும், கருணாநிதி ஆட்சி அமைப்போம் என சொல்வதில்லை; அந்த அளவுக்கா மோசமாக இருந்தது...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி: தி.மு.க., மற்றும் அதன் கூட்டணியில் உள்ள கட்சிகள், 'மீண்டும், கருணாநிதி ஆட்சியை அமைப்போம்' என சொல்வதில்லை. ஆனால், தமிழகத்தில், ஆறு கட்சிகள், 'எம்.ஜி.ஆர்., ஆட்சியை அமைப்போம்' என்கின்றன. அதிலிருந்து, எம்.ஜி.ஆரின் தாக்கம், தமிழகத்தில் அதிகம் இருப்பது புலனாகிறது.
'இவ்வாறு நீங்கள், தி.மு.க., கூட்டத்தில் பேசிய போது, 'ஜிங் சாங்...' என, கூட்டத்தினரே கூறியது, உங்கள் காதுகளுக்கும் கேட்டிருக்கும்...' என, கிண்டலாக சொல்லத் தோன்றும் வகையில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி பேச்சு: தி.மு.க., தலைவர் ஸ்டாலின், எந்தப் போராட்டமாக இருந்தாலும் கண்டார், நடத்தினார், வென்றார் என்பதாகத் தான் இருக்கிறது. இந்த வரலாறு, இன்னும் நான்கு மாதங்களில், கோட்டையில் அவரை அமர வைத்து அழகு பார்க்கக் கூடிய திருப்பமாக அமையக் கூடியதாக இருக்க வேண்டும்.
'சம்பளம் வழங்காமல் இருப்பது பாவம். அதை முதலில், இ.பி.எஸ்., அரசு வழங்க வேண்டும்...' என, அறிவுரை கூறத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன் அறிக்கை: கொரோனாவை கட்டுப்படுத்த, ஒப்பந்த அடிப்படையில் லேப் டெக்னிஷியன்கள், நர்ஸ்கள், டாக்டர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு, கடந்த சில மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. உடனே வழங்க, தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
'நீங்களாக போய் ஆதரவு அளித்தால் தான் உண்டு; யாரும் உங்களைத் தேடி வரப் போவதில்லை. அந்த அளவுக்குத் தான், ஹிந்து அமைப்புகளின் நிலைமை, தமிழகத்தில் உள்ளது...' என, கவலை தெரிவிக்கத் தோன்றும் வகையில், ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் பேட்டி: தேர்தலின் போது, தமிழகத்தில் பெரிய கலவரம் ஏற்படுத்த, நக்சல்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எங்களின் கோரிக்கைகளை ஏற்கும் அரசியல் கட்சிகளுக்கே, தேர்தலில் ஹிந்து முன்னணி ஆதரவளிக்கும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE