தொகுதி கேட்டு குடைச்சல் : ஆளுங்கட்சிக்குள் புகைச்சல்| Dinamalar

தொகுதி கேட்டு குடைச்சல் : ஆளுங்கட்சிக்குள் புகைச்சல்

Updated : டிச 22, 2020 | Added : டிச 22, 2020
Share
வீட்டு வராண்டாவில் அமர்ந்து, நாளிதழ்களை வாசித்துக் கொண்டிருந்தாள் சித்ரா. 'வாட்ஸ்ஆப்' பதிவுகளை பார்த்துக் கொண்டிருந்த மித்ரா, ''என்னக்கா, ஆளுங்கட்சி 'மாஜி'யை தி.மு.க., துாக்கியிருக்கே,'' என, பேச்சை துவக்கினாள்.''மாஜி மேயர் ராஜ்குமார், தி.மு.க.,வுல இணைஞ்சதை தானே சொல்றே. ஆளுங்கட்சியில் அவருக்கு முக்கியத்துவம் தராம இருந்ததால, கொஞ்ச நாளாவே அதிருப்தியில இருந்தாரு.
 தொகுதி கேட்டு குடைச்சல் : ஆளுங்கட்சிக்குள் புகைச்சல்

வீட்டு வராண்டாவில் அமர்ந்து, நாளிதழ்களை வாசித்துக் கொண்டிருந்தாள் சித்ரா. 'வாட்ஸ்ஆப்' பதிவுகளை பார்த்துக் கொண்டிருந்த மித்ரா, ''என்னக்கா, ஆளுங்கட்சி 'மாஜி'யை தி.மு.க., துாக்கியிருக்கே,'' என, பேச்சை துவக்கினாள்.

''மாஜி மேயர் ராஜ்குமார், தி.மு.க.,வுல இணைஞ்சதை தானே சொல்றே. ஆளுங்கட்சியில் அவருக்கு முக்கியத்துவம் தராம இருந்ததால, கொஞ்ச நாளாவே அதிருப்தியில இருந்தாரு. கட்சிக்கூட்டங்களுக்கும், அரசு விழாக்களுக்கும் எட்டி கூட பார்க்கலை. ஓ.பி.எஸ்., பக்கம் சாய்ந்தும் கூட, முக்கியத்துவம் தராததால, தி.மு.க., கூடாரத்துக்கு போயிருக்காரு,''

''தி.மு.க.,வுல மட்டும் உடனே பதவி கொடுத்திருவாங்களா, என்ன?,''''பதவி கொடுப்பாங்களான்னு தெரியலை. ஆளுங்கட்சிக்கு எதிரா, தேர்தல் பிரசாரம் செய்றதுக்கு கொம்பு சீவி விடுறதுக்கு வாய்ப்பிருக்கு. அவருடைய 'வாய்ஸ்' எடுபடுறதுக்கு வாய்ப்பில்லைன்னு கட்சிக்காரங்க பேசிக்கிறாங்க,''

''தி.மு.க., தரப்புல தேர்தல் களத்துக்கு வரப்போறவங்க, கோடிக்கணக்குல செலவழிக்க தயாரா இருக்காங்களாமே,''

''ஆமா, மித்து! 10 வருஷமா ஆட்சியில் இல்லாததால, வரப்போற தேர்தல்ல 'எப்படியாவது' ஜெயிச்சு, அரியணை ஏறனும்னு வெறியோடு இருக்காங்க. 'சீட்' வாங்கறதுக்கு, தலைமையில் முட்டி மோதிட்டு இருக்காங்க. 'சிட்டிங்' எம்.எல்.ஏ., கூட, தொகுதி மாறப்போறதா பேசிக்கிறாங்க,''

''மருதமலையை பெயருடன் இணைத்து வலம் வர்ற நிர்வாகி, கிணத்துக்கடவு தொகுதியை கேக்குறாராமே,''

''ஆமாக்கா, உண்மைதான்! பசையுள்ள பார்ட்டிங்கிறதுனால, ஆளுங்கட்சிக்காரங்க செலவழிக்க பயப்படுறாங்களாம். 'மாஜி' அமைச்சரை, கிணத்துக்கடவு தொகுதியில் களமிறங்கச் சொல்லியிருக்காங்க. அவரோ, பொள்ளாச்சியை கேக்குறாராம்,''

''கொஞ்ச நாளைக்கு முன்னாடி, கோவைப்புதுார் ஏரியாவுல கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடந்திருக்கு. சிறப்பு விருந்தினரா கலந்துக்கிட்ட வி.ஐ.பி., பூத் கமிட்டி அமைக்கிறதுல சுணக்கமா இருக்கற நிர்வாகிகளை 'லெப்ட் ரைட்' வாங்கிட்டாராம்,''

''தேர்தலுக்கு நாளில்லை; 'அசால்ட்'டா இருக்காதீங்க. ஒவ்வொரு பூத்திலும் அரசியல் சாராத, 50 மகளிரை தேர்வு செய்யணும். அவுங்களை களப்பணிக்கு தயார் செய்யணும்னு அறிவுரை சொல்லியிருக்காராம்,''

''அதெல்லாம் இருக்கட்டும். வடவள்ளிக்காரர் 'அப்செட்'டுல இருக்கறதா சொல்றாங்களே, உண்மையா,''

''அதுவா, தொகுதி உங்களுக்குதான்னு சொன்னதுனால, பல கோடியை வாரியிறைச்சு, ஏகப்பட்ட வேலை செஞ்சிருக்காரு. ஆனா, கவுண்டம்பாளையத்துல தி.மு.க.,வுக்கு ஈடுகொடுக்க முடியாதுன்னு நினைக்கிற, ஓ.பி.எஸ்., ஆதரவு 'சிட்டிங்' எம்.எல்.ஏ., வடக்கு தொகுதியை கேக்குறாராம். ஓ.பி.எஸ்., ஆதரவு இருக்கறதுனால, குடைச்சல் கொடுக்குறாராம். இவ்வளவு நாளா செலவு செஞ்சு, தொகுதியை தயார் செஞ்சு வச்சிருக்கிற வடவள்ளிக்காரர், அதிருப்தியின் உச்சத்துக்கே போயிட்டாராம்,''''மித்து, யார் எவ்வளவு செலவு செஞ்சிருந்தாலும், இனிமே கோடிக்கணக்குல செலவு செஞ்சாலும், ரஜினியும், கமலும் தேர்தல் களத்தையே குழப்பிடுவாங்களே,''

''ஆமாக்கா, நீங்க சொல்றதும் சரிதான்! ஓட்டு வங்கி பிரிஞ்சிடுமேன்னு, ஆளுங்கட்சி தரப்பு கவலைப்படுது. மூணு மாவட்டத்துக்கு தேர்தல் பொறுப்பாளரா, ஆளுங்கட்சி வி.ஐ.பி.,யை நியமிச்சுருக்கறதுனால, தொகுதிகளை ஜெயிச்சுக் காட்ட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டிருக்கு,''

''மித்து, தேர்தல் வேலை செய்றதுல, அ.தி.மு.க.,வை மிஞ்ச முடியாது; அந்தளவுக்கு இறங்கி வேலை செய்வாங்களே,'' என, சித்ரா சொல்ல,

''அதெல்லாம் உண்மையா இருந்தாலும், இப்போதைக்கு கள நிலவரம் வேற மாதிரி இருக்கு. சில வாரத்துக்கு முன்னாடி, கொங்கு மண்டலத்துல, குறிப்பிட்ட ஆறு தொகுதியில், தனியார் ஏஜன்சியினர் கருத்து கணிப்பு நடத்தியிருக்காங்க. ஆளுங்கட்சிக்கு இறங்குமுகமா இருந்துச்சாம்; ரஜினியின் அரசியல் பிரவேசம், தி.மு.க.,வை காட்டிலும், அ.தி.மு.க., ஓட்டு வங்கியை அதிகமா சேதப்படுத்துறது தெரிஞ்சிருக்கு, என்றபடி, 'டிவி'யை 'ஆன்' செய்தாள் மித்ரா.

ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்குவது தொடர்பான செய்தி, ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.அதை கவனித்த சித்ரா, ''இனி, கரன்சி மழை பொழிய ஆரம்பிக்கும் போலிருக்கே,'' என, கேட்டாள்.

''அக்கா, மக்கள் ரொம்ப தெளிவா இருக்காங்க. பொங்கல் பரிசு தொகையை அதிகப்படுத்துனதை பெருசா நினைக்கலை. 'கொரோனா' பரவல் சமயத்துல கொடுத்திருந்தா, பிரயோஜனமா இருந்திருக்கும்னு பேசிக்கிறாங்க,''மியூசிக் சேனலுக்கு 'டிவி'யை மாற்றிய சித்ரா,

''கொரோனா பரவல் எப்படியிருக்கு; இன்னமும் எத்தனை நாளைக்குதான், 'மாஸ்க்' அணியணுமாம்,'' என, 'ரூட்' மாறினாள்.

''அக்கா, தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்திருச்சு; சிட்டியை தாண்டுனா, யாருமே 'மாஸ்க்' அணியறதே இல்லை. ஆளுங்கட்சி நடத்துற கூட்டமா இருந்தாலும் சரி; மாவட்ட நிர்வாகம் நடத்துற ஆய்வு கூட்டமா இருந்தாலும் சரி, சமூக இடைவெளியை பின்பற்றுவதே இல்லை,''

''இருந்தாலும், ஜவுளிக்கடையிலும், மொபைல் போன் கடையிலும் கூட்டம் அதிகமா இருக்குன்னு சொல்லி, 'பைன்' போட்டு, கல்லா கட்டுறதுறதுக்காக, 'கொரோனா'வை சாகடிக்காம, அதிகாரிகளில் ஒரு குரூப் இன்னமும் பரப்பிட்டு இருக்காம்,''

''துணை ஜனாதிபதி கலந்துக்கிட்ட விழாவையே சொதப்பிட்டாங்களாமே,'' என, கேட்டாள் சித்ரா.

''ஆமாக்கா, விமான நிலையத்துல இருந்து அரசு விருந்தினர் மாளிகைக்கு போற வழியில், ஒரு குரூப், கறுப்புக்கொடி காட்டுச்சு; அந்தளவுக்கு பாதுகாப்புல போலீஸ்காரங்க கோட்டை விட்டுட்டாங்க. மறுநாள், வேளாண் பல்கலையில நடந்த பட்டமளிப்பு விழாவுல, கறுப்பு மாஸ்க், கறுப்பு டீசர்ட், கறுப்பு சட்டை அணிந்தவர்களுக்கு, 'தடா' போட்டாங்க. கறுப்பு மாஸ்க்குடன் வந்தவர்களை கழற்றச் சொல்லி, நீல நிறத்தில் வழங்கியிருக்காங்க. தண்ணீர் பாட்டில் கூட கொடுக்க விடாமல் தடுத்திட்டாங்களாம்,''

''வனச்சரகர் பதவியை கைப்பத்துறதுக்கு, பேரம் பேசிட்டு இருக்காங்களாமே,'' என கேட்டபடி, சமையலறைக்குள் நுழைந்தாள் சித்ரா.

''அதுவா, சந்தனக்கட்டை பதுக்கல் விவகாரத்தில், போளுவாம்பட்டி வனச்சரகர் ஆரோக்கியசாமியை, 'சஸ்பெண்ட்' செஞ்சிருக்காங்க. அந்த பதவிக்கு வர்றதுக்கு இரண்டு வனச்சரகர்கள் முட்டி மோதுறாங்களாம். 'போஸ்டிங்' போட்டுக் கொடுக்குறதுக்கு பேரம் பேசிட்டு இருக்காங்களாம்,''

''என்னப்பா, இப்படி சொல்றே! கரன்சி கொடுத்து, வனத்துறை வேலைக்கு யாராச்சும் வருவாங்க. அதுல, சம்பாதிக்க முடியுமா, என்ன,''

''என்னக்கா, விவரம் புரியுமா இருக்கீங்க. வனத்துறையில ஏகப்பட்ட சமாச்சாரம் நடக்குது. இதுவரைக்கும் எத்தனை யானை செத்திருக்கு; உண்மையை கண்டுபிடிச்சு, நடவடிக்கை எடுத்திருக்காங்களா. தங்கமலை ரகசியம் மாதிரி எக்கச்சக்க பிரச்னைகள் பொதிஞ்சிருக்கு, தெரியுமா''

''அப்படியா,'' என வாயை பிளந்த சித்ரா, ''போலீஸ் மேட்டர் எதுவுமே சொல்லலையே,'' என, அங்கலாய்த்தாள்.''அக்கா, காவல்துறை செயல்பாட்டை கிளறினாலும், கொஞ்ச நேரம் மைக்கை 'வாட்ச்' பண்ணினாலும், ஏகப்பட்ட விஷயம் வெளிச்சத்துக்கு வரும். கொஞ்ச நாளைக்கு முன்னாடி, குனியமுத்துார்ல இருக்குற ஒரு பேக்கரியில், இரவு, 12:00 மணிக்கும் கலர் கலரா விளக்கு எரிய விட்டு, திறந்து வச்சிருக்காங்க.

அதை பார்த்த போலீஸ்காரர், மைக்குல தகவல் சொல்லியிருக்காரு; அவரை கடிந்துகொண்ட அதிகாரிகள், கட்டுப்பாட்டு அறைக்கு மாத்திட்டாங்களாம்,''''மித்து, இப்படித்தான், காவல்துறையில் வேண்டாதவங்களை, ஏதாவது ஒரு காரணம் சொல்லி பழிவாங்குற போக்கு அதிகமாயிடுச்சாம். ஒத்துவராத போலீஸ்காரங்களை வேற இடத்துக்கு துாக்கியடிக்கிறதுக்கு, விரும்பத்தகாத குற்றச்சாட்டை சுமத்தி, கேவலப்படுத்துறாங்களாம்.

அப்படித்தான், 'காதல் ஜோடின்னு கட்டுக்கதை கிளப்பி விட்டு, தனக்கு கீழே வேலை பார்த்த லேடி போலீசை பழி வாங்கிட்டாங்களாம் அந்த லேடி ஆபீசர். பாதிக்கப்பட்ட பெண் போலீசு, தனக்கு தெரிஞ்ச அதிகாரிங்க கிட்டயெல்லாம் புலம்பிட்டு இருக்காங்களாம், '' என்றபடி, பில்டர் காபி கோப்பையை நீட்டினாள் சித்ரா.

அதை வாங்கி உறிஞ்சிய மித்ரா, ''எனக்கு இன்னொரு போலீஸ் மேட்டர் தெரியும் சொல்றேன் கேளுங்க என்றபடி, மதுக்கரை மார்க்கெட் ஏரியாவுல பாழடைஞ்ச வீடு இருக்குதாம். மூட்டை மூட்டையா கஞ்சா பதுக்கி, பொட்டலம் தயாரிச்சு, சிட்டிக்குள்ள அனுப்புறாங்களாம். போலீசுக்கு தகவல் சொல்லியும் நடவடிக்கை இல்லையாம்,'' என்றாள்.

''ஓய்வூதியர்களை ரொம்பவே இளக்காரமா பார்க்குறாங்களாமே,'' என, கடைசி மேட்டருக்கு தாவினாள் சித்ரா.

''ஆமாக்கா, நானும் கேள்விப்பட்டேன். கோவைப்புதுார்ல இருக்கற போஸ்ட் ஆபீசுக்கு வர்ற ஓய்வூதியர்களை தரக்குறைவா நடத்துறதா, புகார் எழுந்திருக்கு. பென்ஷன் சம்பந்தமா ஏதாச்சும் சந்தேகம் கேட்டா, மரியாதை இல்லாம பேசுறாங்களாம்.

அரசு துறையில் பல வருஷம் சேவை செஞ்சவங்களையே இப்படி நடத்துனாங்கன்னா, வாடிக்கையாளர்களை எப்படி நடத்துவாங்கன்னு புரிஞ்சுக்குங்க,'' என்றபடி, நகர்வலம் செல்ல, ஸ்கூட்டரை 'ஸ்டார்ட்' செய்தாள் மித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X