புதுடில்லி: பன்முகத்தன்மையின் பலத்தை மறக்கக்கூடாது. அதனை பலவீனப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடக்கூடாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அலிகார்க் முஸ்லிம் பல்கலை.,யின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்சிங் முறையில் கலந்து கொண்டார். நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நினைவு தபால் தலையையும் மோடி வெளியிட்டார்.
பின்னர் அவர் பேசியதாவது: அலிகார்க் முஸ்லிம் பல்கலை கட்டடத்தின் தொடர்புடைய கல்வி வரலாறானது, இந்திய பாரம்பரியத்தில் மதிப்பு மிக்கது. எனது வெளிநாட்டு பயணங்களின் போது, இங்கு படித்த பல முன்னாள் மாணவர்களை சந்தித்துள்ளேன். அப்போதெல்லாம், அவர்கள், அலிகார்க் முஸ்லிம் பல்கலையின் முன்னாள் மாணவர்கள் என பெருமையுடன் கூறுவார்கள்.
இப்பல்கலை மாணவர்கள், உலகின் எந்த பகுதிக்கு சென்றாலும், இந்தியாவின் பெருமைமிக்க கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றுகின்றனர். 100 ஆண்டு கால வரலாற்றில், லட்சகணக்கான மாணவர்களின் வாழ்க்கையை மாற்றியதுடன், அவர்களுக்கு நவீன மற்றும் அறிவியல் சிந்தனைகளை வழங்கியதுடன், சமூகத்திற்கும், நாட்டிற்கும் முன்மாதிரியாக ஏதாவது செய்யும்படி மாற்றியுள்ளது.
கொரோனா காலத்தில், இப்பல்கலை சமூகத்திற்கு செய்த உதவி பாராட்டக்கூடியது. இலவசமாக தேர்வு நடத்தியது, தனிமை வார்டுகள் அமைத்தது, பிளாஸ்மா வங்கி அமைத்ததும், பிஎம்கேர்ஸ் நிதிக்கு நிதியுதவி வழங்கியது. இவை எல்லாம், சமூகத்திற்கு நீங்கள் அளித்த உறுதியை நிறைவேற்றுவதில் உள்ள உறுதித்தன்மையை காட்டுகிறது.

நாட்டில் ஏற்படும் வளர்ச்சியின் பலன்கள் , எவ்வித பாகுபாடு பார்க்காமல் அனைத்து குடிமக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற பாதையில் தேசம் செல்கிறது. அரசியல் சாசனம் வழங்கிய உரிமைகள் மற்றும் அவர்களின் எதிர்காலம் உறுதி செய்யப்பட வேண்டும் என்ற இலக்கை நோக்கி தேசம் சென்று கொண்டுள்ளது. எந்த மத பாகுபாடும் காட்டாமல், அனைவருக்கும் அனைத்து வாய்ப்புகள் கிடைக்கவும், அதன் மூலம் அவர்களின் கனவுகள் நிறைவேற வேண்டும் என்ற பாதையில் தேசம் பயணிக்கிறது.
கடந்த 70 ஆண்டுகளாக, பள்ளியில் இருந்து பாதியில் நிற்கும் முஸ்லிம் பெண்களின் எண்ணிக்கை 70 சதவீதமாக இருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, தூய்மை இந்திய, கிராமங்களில் கழிப்பறை கட்டுதல் மற்றும் பெண்கள் பள்ளியில் கழிப்பறை கட்டியதன் மூலம் 30 சதவீதமாக குறைந்துள்ளது.
அலிகார்க் முஸ்லிம் பல்கலை.,யானது ஒரு நகரத்தை போல் இருக்கும் என என்னிடம் பலர் கூறியுள்ளனர். இங்குள்ள துறைகள், விடுதிகள், ஆயிரகணக்கான ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களை பார்க்கும் போது, மினி இந்தியாவை போல் உள்ளது. இங்கு பார்க்கும் பன்முகத்தன்மையானது, இப்பல்கலைக்கு மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த நாட்டிற்கும் பலமாக உள்ளது.இந்த பன்முகத்தன்மையின் பலத்தை மறக்கக்கூடாது. பலவீனப்படுத்த முடியாது. தேசம் வளர்ச்சி பெறவும், அதற்கான பணிகளில் ஈடுபடவும் அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE