'நீங்கள் நினைத்தால் மட்டும் போதுமா; மக்கள் நினைக்க வேண்டாமா...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக காங்., முன்னாள் தலைவர் தங்கபாலு பேச்சு: நாட்டு மக்களுக்கு எதிரானவற்றையே, மோடி அரசு தொடர்ந்து செய்கிறது. அதற்கு ஆதரவாக இருக்கும், தமிழக அ.தி.மு.க., அரசை அகற்றுவதே நம் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
'அப்போ, நீங்கள் கூறும் அந்த வார்த்தையை, தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் அதிகாரபூர்வ வார்த்தையாக மாற்றி விடுமா...' என, நெத்தியடியாக கேட்கத் தோன்றும் வகையில், தி.மு.க.,வில் உள்ள, எழுத்தாளர் மனுஷ்யபுத்ரன் பேட்டி: தி.மு.க., துணை பொதுச் செயலர் ராஜா, 'ஆத்தா' என கூறியது உண்மை தான். அம்மாவையும், கடவுளையும், ஆத்தா என்று தானே கூறுகிறோம். ஆத்தா உன் வாசலிலே என்ற திரைப்படம் கூட வந்துள்ளதே. ஆத்தா என்ற சொல் தவறானது அல்ல!
'வழக்கமாக, ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு தாவியவர்களை, பயங்கரமாக சாடுவரே; நீங்கள் அப்படி செய்வதில்லையே... அத தான், சந்தேகத்தை வரவழைக்கிறது...' என, கூறத் துாண்டும் வகையில், பா.ஜ., தேசிய செயற்குழு முன்னாள் தலைவர் எச்.ராஜா பேட்டி: தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்த தங்க தமிழ்ச் செல்வன் எப்படி, தி.மு.க.,வில் சேர்ந்துள்ளாரோ அப்படித் தான், பா.ஜ.,வில் இருந்த அர்ஜுனமூர்த்தியும், ரஜினி பக்கம் போயிருக்கிறார். இந்த விஷயத்தில், பா.ஜ.,வுக்கு தொடர்பில்லை.
'நம்பிக்கை தான் வெற்றிக்கு ஆதாரம். அதே நேரத்தில், அதீத நம்பிக்கையாக போய் விடக் கூடாது...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக வருவாய் துறை அமைச்சர் உதய குமார் பேச்சு: தமிழகத்தில், ஜெ., செல்வாக்கு இன்னும் குறையவில்லை. எனவே, இப்போது தேர்தல் வந்தாலும், அதைச் சந்திக்க, அ.தி.மு.க., தயாராக உள்ளது. நாம் தான் வெற்றி பெறுவோம்.
'யாரை கூறுகிறீர்கள்; ரஜினியை சாடுவது போல, உங்கள் கூட்டணியையும் சாடுவது போல உள்ளதே...' என, சொல்லத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் பேச்சு: தமிழகத்தில் எழுந்துள்ள எழுச்சி, ஆட்சி மாற்றத்தை பறை சாற்றுகிறது. கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள் எல்லாம், ஆட்சி மாற்றம் பற்றி பேசுகின்றனர்.
'தேர்தல் நேரத்தில், சமூக நீதி, உயர் ஜாதி எதிர்ப்பு போன்ற நம் கொள்கைகளை துாசு தட்டி எழுப்பி பிரச்னை செய்யிறாரே, இந்த வீரமணி என, தி.மு.க., தலைவர் உங்கள் மீது கோபம் கொண்டதாக கேள்வி...' என, நினைவுபடுத்தத் தோன்றும் வகையில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அறிக்கை: இந்தியாவிலேயே, சமூக நீதி என்ற சமுதாய கொள்கை உடைய ஓர் அரசியல் கட்சி உண்டு என்றால், அது, தி.மு.க., மட்டும் தான். 1920ல் துவங்கிய, உயர் ஜாதி ஆணவ எதிர்ப்புக்காக துவக்கப்பட்ட நீதிக்கட்சியின் வழிவந்த, தி.மு.க.,வை ஆட்சி பீடத்தில் அமர்த்த உறுதி எடுப்போம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE