பொது செய்தி

தமிழ்நாடு

புதிய கொரோனா: 'கோட்டை' விடக்கூடாது தமிழக அரசு!

Updated : டிச 23, 2020 | Added : டிச 22, 2020 | கருத்துகள் (24)
Share
Advertisement
சென்னை : பிரிட்டனில் உருவெடுத்துள்ள, புதிய ரக கொரோனா தொற்றை தடுக்க, சரக்கு விமான போக்குவரத்தை தவிர்த்து, பயணியர் விமான சேவையை, முற்றிலும் ரத்து செய்வது அவசியம். ஊரடங்கு காலத்தின் போது மேற்கொள்ளப்பட்ட, தடுப்பு நடவடிக்கையை பின்பற்றி, பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள், வீடு தேடி வர வழிவகை செய்ய வேண்டும்.புதிய ரக தொற்று வேகமாக பரவும் என்பதால், பொது போக்குவரத்தை
Covid19, Corona Virus, தமிழக அரசு, புதிய கொரோனா, கொரோனா,  விமான நிலையங்கள், சீல், பொது போக்குவரத்து, கண்காணிப்பு, அத்தியாவசிய பொருட்கள், பொதுமக்கள், நிகழ்ச்சிகள், தடை, பிரிட்டன்,

சென்னை : பிரிட்டனில் உருவெடுத்துள்ள, புதிய ரக கொரோனா தொற்றை தடுக்க, சரக்கு விமான போக்குவரத்தை தவிர்த்து, பயணியர் விமான சேவையை, முற்றிலும் ரத்து செய்வது அவசியம். ஊரடங்கு காலத்தின் போது மேற்கொள்ளப்பட்ட, தடுப்பு நடவடிக்கையை பின்பற்றி, பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள், வீடு தேடி வர வழிவகை செய்ய வேண்டும்.

புதிய ரக தொற்று வேகமாக பரவும் என்பதால், பொது போக்குவரத்தை கண்காணிப்பதுடன், பொது மக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும். முன்னர், தொற்று பரவலை கட்டுபடுத்த தவறியதை போல, தமிழக அரசு கோட்டை விடாமல், தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பிரிட்டனில் பரவியுள்ள, புதிய வகை கொரோனா வைரஸ், இந்தியாவில் பரவாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மத்திய அரசு, 31ம் தேதி வரை, பிரிட்டனுக்கு நேரடி விமான சேவையை ரத்து செய்துள்ளது. பிரிட்டனிலிருந்து நேரடி விமான சேவை தவிர்த்து, துபாய், சிகாகோ உள்ளிட்ட நகரங்களில் இருந்து, இணைப்பு விமான சேவைகளில், இந்தியா வரும் பயணியர் கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்ட விமான நிலையங்களில், சோதனை மையங்கள் அமைக்கப்பட்டு, அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.
அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரை, சென்னை, மதுரை, கோவை, திருச்சி நகரங்களுக்கு, பல்வேறு நாடுகளிலிருந்து இணைப்பு விமானங்கள் மற்றும் உள்நாட்டு விமானங்களில் வரும் பயணியர், அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். கடந்த, 10 நாட்களில், லண்டனிலிருந்து தமிழகத்திற்கு, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணியர் வந்திருப்பதால், அவர்களின் விபரங்களை, தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட விமான நிலைய அதிகாரிகளுடன் இணைந்து சேகரித்து வருகின்றனர்.


பரிசோதனைதுபாயில் இருந்து, டில்லி வழியாக, நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று காலை சென்னை வந்த விமானங்களில், லண்டனிலிருந்து, 24 பேர் வந்தனர். அவர்களுக்கு, மருத்துவ பரிசோதனை நடந்ததில், ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. கிண்டி கிங் ஆய்வக வளாகத்தில் உள்ள, அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில், அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அங்கு, அவர் தனி அறையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவரை தவிர்த்து, மற்றவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:
லண்டனிலிருந்து, 10 நாட்களில், தமிழகம் வந்த அனைவரையும் தேடிக் கண்டுபிடித்து, அவர்களுக்கு மருத்துவ பரிசோதணை செய்ய உள்ளோம். தற்போது, லண்டனிலிருந்து வந்த பயணியர், பயணம் செய்த விமானத்தில், அவர்களுடன், முன் மூன்று இருக்கைகள், பின் மூன்று இருக்கைகளில் வந்த நபர்களுக்கும் மருத்துவ பரிசோதனைகள் நடக்க உள்ளன.சென்னை, திருச்சி, மதுரை, கோவை விமான நிலையங்களில், லண்டனில் இருந்து வந்தவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. பயணியரிடம் சேகரிக்கப்படும் மாதிரிகள் பரிசோதனை முடிவு, எட்டு மணி நேரத்தில் அறிவிக்கப்படும்.


எல்லைகளில் சோதனை


தற்போது, லண்டனுக்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. லண்டனில் இருந்து வேறு விமானங்களில் வந்து, தமிழகத்திற்குள் சாலை வழியாக, சோதனையில்லாமல் வந்து விடக்கூடாது. குறிப்பாக, பெங்களூரிலிருந்து வர வாய்ப்புள்ளதால், தமிழக - கர்நாடகா எல்லை பகுதி தீவிரமாக கண்காணிப்படுகிறது.


வதந்திகள்லண்டனில் பரவி வரும் நோய் தொற்று, இங்கும் பரவும் என, பரப்பப்படும் வதந்திகளை, பொது மக்கள் நம்ப வேண்டாம். லண்டனில் இருந்து வந்த பயணியர், அடையாளம் காணப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். பொது மக்கள், முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைபிடித்து, தகுந்த நேரத்தில் கைகளை கழுவி வந்தால், நோய் தொற்று பரவாமல் பாதுகாக்கலாம்.

தற்போது, பிரிட்டன் அரசு, புதிய வகை கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது என, அறிவித்துள்ளது. இருந்தும், அந்த நோய் தாக்குதல் குறித்த உறுதியான தகவல்கள் இல்லை. இது குறித்து, மருத்துவ நிபுணர்களுடன் கலந்தாலோசித்து வருகிறோம். பொது மக்கள் பீதி அடைய வேண்டாம். அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.


வீரியம் மிகுந்ததா?கடந்த செப்டம்பர் மாதத்தில், புதிய ரக கொரோனா வைரஸ், பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டது. லண்டன் நகரில், நவம்பர் மாதத்தில், 25 சதவீத நோயாளிகள், இந்த புதிய ரக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். மற்ற ரக கொரோனா வைரஸை விட, புதிய ரக கொரோனா வைரஸ், 70 சதவீதம் கூடுதலாக பரவலாம் என, பிரிட்டன் அரசு குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து மருத்துவ வல்லுனர்கள் கூறியதாவது:புதிய ரக கொரோனா வைரஸ் பரவுவது குறித்து, இப்போதே கருத்து வெளியிடுவது, மிகவும் முன்கூட்டியே கூறுவதாக அமையும். இந்த ரக கொரோனா வைரஸ், மற்ற எந்த ரக கொரோனா வைரஸை விடவும், அதிவேகமாக பரவுகிறது. புதிய ரக கொரோனா வைரஸ், 70 சதவீதத்தை விட மிக கூடுதலாக பரவலாம் அல்லது, 70 சதவீதத்தை விட மிகக் குறைவாகவே பரவலாம். இதுகுறித்த ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.


அரசு செய்ய வேண்டியவை என்ன?


* பிரிட்டனில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தி இருந்தாலும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து, தனிமைப்படுத்த வேண்டும்; உள்நாட்டு விமான பயணியரையும் கண்காணிக்க வேண்டும்.

* மாநிலம் முழுதும், பொது போக்குவரத்தை தடை செய்ய வேண்டும்.

* கொரோனா பாதுகாப்பு குறித்து, பத்திரிகை மற்றும் தொலைகாட்சிகளில், அதிகம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

* தனியார் விளம்பரங்களிலும், சுத்தம், சுகாதாரம், தனிமனித இடைவெளியை வலியுறுத்த வேண்டும்
.

* மளிகை மற்றும் காய்கறி கடைகள், உணவகங்கள், அத்தியாவசிய பொருட்களை சப்ளை செய்யும் வாகனங்கள், 24 மணி நேரமும் இயங்க அனுமதிக்க வேண்டும்.

* கொரோனா தொற்று அதிகமாக இருந்த காலத்தில், சென்னையில் காய்கறிகள், மளிகை பொருட்களை, வீடுகளுக்கே சென்று வினியோகிக்கும் திட்டத்தை, மாநகராட்சி செயல்படுத்தியது. அதேபோன்று திட்டத்தை, மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

* மீன், காய்கறி உள்ளிட்ட சந்தைகள், திறந்தவெளிகளில் அமைக்க வழிவகை செய்ய வேண்டும்; அங்கு, தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்படுவதை, குழு அமைத்து, கண்காணிப்பது அவசியம்.

* அனைவரும் வீட்டில் இருந்து பணியாற்றும் சூழலை ஏற்படுத்த வேண்டும்.

* சுகாதார பணியாளர்கள், துப்புரவு பணியாளர்களின் தேவைகளை, உடனுக்குடன் பூர்த்தி செய்ய வேண்டும்.

* கொரோனாவுடன், இயற்கை சீற்றங்களையும் சந்திக்க வேண்டிய சூழல் உருவாகும் என, ஜோதிடர்கள் எச்சரித்துள்ளதால், உணவு பொருட்களை பாதுகாத்து, அனைத்து தரப்பு மக்களுக்கும், தேவையான அளவு வினியோகிக்க வேண்டும்.

* தேர்தல் பிரசாரங்களை முற்றிலும் தடை செய்ய வேண்டும்; பொது கழிப்பறைகள் சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும்.

* அலுவலகங்கள், வணிக வளாகங்கள் போன்றவற்றில், 'ஏசி' பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்.

* பொது போக்குவரத்தில், சமூக இடைவெளி பின்பற்றப்படுவதை, குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்.

* இதுபோன்று, முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு, உயிரிழப்பு அதிகரிக்காமல், அரசு தவிர்க்க வேண்டும். மக்கள் ஒத்துழைப்பு அவசியம்


பிரிட்டனில் இருந்து வந்த 20 பேருக்கு கொரோனா உறுதி


பிரிட்டன் தலைநகர் லண்டனில் இருந்து டில்லி விமான நிலையத்துக்கு நேற்று முன் தினம் இரவு பயணியர் விமானம் வந்தது. இதில் வந்த பயணியருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஐந்து பேருக்கு கொரோனா உறுதியானது. அந்த விமானத்தில் வந்த பயணியரில் ஒருவர் டில்லியில் இருந்து உள்நாட்டு விமானம் வாயிலாக சென்னை வந்தடைந்தார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் செய்யப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதியானது.இவர்களை தாக்கியுள்ளது பிரிட்டனில் உருமாற்றம் அடைந்துள்ள புதிய வகை வைரசா என்பதை அறிய மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவை தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தின் கோல்கட்டா விமான நிலையத்திற்கு கடந்த 20ல் பிரிட்டன் விமானம் வந்தது. இதில் மொத்தம் 222 பயணியர் வந்தனர். அதில் 25 பேரிடம் கொரோனா பரிசோதனை செய்ததற்கான சான்று இல்லை.எனவே அவர்கள் அனைவரும் அருகில் உள்ள முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே பிரிட்டனில் இருந்து குஜராதின் ஆமதாபாத்துக்கு நேற்று வந்த விமானத்தில் நான்கு பேருக்கும் பஞ்சாபின் அமிர்தசரஸ் வந்த விமானத்தில் எட்டு பேருக்கும் கொரோனா உறுதியானது.
தனி அறையில் சிகிச்சை!


சென்னை, கிண்டி, கொரோனா சிறப்பு மருத்துவமனை இயக்குனர் நாராயணசாமி கூறியதாவது:
லண்டனில் இருந்த வந்த நபரை, தனி அறையில் தங்க வைத்து, சிகிச்சை அளிக்கிறோம். அவருக்கு, முதல்நிலை தொற்று பாதிப்பு உள்ளது. இதனால், உடல் உபாதைகள் ஏற்படவில்லை. அவருக்கு புதிய ரக தொற்று ஏற்பட்டுள்ளதா என, ஆய்வு செய்ய, அவரது மாதிரிகள், மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள, புனே ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
இவ்வாறு, அவர் கூறினார்.


முதல்வர் வேண்டுகோள்


துாத்துக்குடியில், முதல்வர் இ.பி.எஸ்., அளித்த பேட்டி: தமிழகத்தை பொறுத்தவரை, வெளிநாட்டிலிருந்து வருகிறவர்களை எல்லாம், முழுமையாக பரிசோதனை செய்து தான் அனுமதிக்கிறோம். நேற்று கூட பரிசோதனையில், தொற்றுள்ளவரை கண்டு பிடித்துள்ளோம். உடனடியாக, அவரை தனிமைப்படுத்தி உள்ளோம்.

பொது மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்பது, மிக மிக முக்கியம். இதை, நாட்டு மக்கள் உணர வேண்டும். வளர்ந்த நாடுகளில், அரசு சொன்ன வழிமுறைகளை கடைபிடிக்காத காரணத்தால், மீண்டும், கொரோனா வைரஸ் தொடங்கி இருக்கிறது.

நம் பகுதியில், யாருமே முகக் கவசம் அணிவதில்லை. முகக் கவசம் அணிவது, மிக மிக முக்கியம் என்று, நாங்களும் சொல்லிக் கொண்டே இருக்கிறோம். கொரோனா வைரஸ், ஒருவரிடமிருந்து மற்றவருக்கு எளிதாக பரவக் கூடியது. இதை கட்டுப்படுத்த வேண்டும் என்றால், ஒட்டுமொத்த மக்களும், இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும். அரசு அறிவித்த வழிமுறைகளை, தவறாமல் பின்பற்ற வேண்டும். அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும். இவ்வாறு, முதல்வர் கூறினார்.கண்காணிப்பில், 1,088 பேர்!


''பிரிட்டனில் இருந்து, 10 நாட்களில் வந்த, 1,088 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்,'' என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.புதுக்கோட்டையில், நேற்று அவர் அளித்த பேட்டி: பிரிட்டனில் இருந்து, தமிழகத்திற்கு விமானம் வாயிலாக வந்த, 15 பேருக்கு பரிசோதனை செய்ததில், ஒருவருக்கு 'பாசிட்டிவ்' என, வந்துள்ளது. அந்த, 'சாம்பிள்' மரபணு சோதனைக்கு, புனே நகருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

முடிவு வந்தால் தான், அது என்ன மாதிரியான வைரஸ் என்பது தெரியவரும். அந்த நபர் அரசின் தீவிர கண்காணிப்புப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார். பிரிட்டனில் இருந்து, 10 நாட்களாக தமிழகம் வந்த, 1,088 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. புது வகையான வைரஸ் குறித்து, பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. தமிழக அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இவ்வாறு, விஜயபாஸ்கர் கூறினார்.


தனிமைக்கு ஓட்டல்களில் 1,000 படுக்கைகள் தயார்!


வெளிநாடுகளில் இருந்து வருவோரை தனிமைப்படுத்த, ஓட்டல்களில், 1,000 படுக்கை வசதிகள் தயாராக இருப்பதாக, சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் அளித்த பேட்டி: பிரிட்டன் நாட்டில், புதிய வைரஸ் வேகமாக பரவி வருகிறது. டில்லி வழியாக சென்னை வந்தவருக்கு, தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், டிச., 1 முதல், பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வந்தோர் பட்டியலை சேகரித்து வருகிறோம்.

விமானத்துறை அதிகாரிகளுடன் இணைந்து, பணியை வேகப்படுத்தி, தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வோம்.வெளிநாடுகளில் இருந்து திரும்பியோர், அறிகுறி இருந்தால், தாமதமின்றி, உடனே மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து, மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

சென்னை மாநகராட்சி சுகாதார நல அலுவலர் ஜெகதீசன் கூறுகையில், ''வெளிநாடுகளில் இருந்து வருவோரை தனிமைப்படுத்த, சென்னையில் உள்ள ஓட்டல்களில், 1,000 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளும், அரசு மருத்துவமனைகளில் உள்ளன,'' என்றார்.


பள்ளிகள் திறப்பில் மீண்டும் சிக்கல்


தமிழகத்தில், ஊரடங்கு காரணமாக, 2020 மார்ச் முதல், பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. புதிய கல்வி ஆண்டு துவங்கியும் பள்ளிகள் திறக்கப்படவில்லை.இந்நிலையில், சமீப காலமாக, கொரோனா பாதிப்பு குறைந்து, நிலைமை சீராகி வந்ததால், ஜனவரியில் பள்ளிகளை திறக்கலாம் என, பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வந்தனர். ஆனால், பிரிட்டனில் இருந்து புதிய வகை கொரோனா வைரஸ் பரவுகிறது.

அங்கிருந்து சென்னை வந்த பயணி ஒருவருக்கு, கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எனவே, மீண்டும் ஊரடங்கு விதிகள் அமல்படுத்தப்படலாம் என, பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த சூழலில், பள்ளிகளை திறப்பது சரியாக இருக்குமா; சுகாதாரத்துறை அனுமதி அளிக்குமா என, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். மீண்டும் ஊரடங்கு கடுமையானால், பள்ளிகள் திறப்பு மேலும் தாமதமாகலாம்.


பிரிட்டனை மூடுங்கள் விஞ்ஞானி எச்சரிக்கை


தெற்கு பிரிட்டன் மற்றும் லண்டன் ஆகிய பகுதிகளில் மட்டும், இம்மாத இறுதி வரை, கடுமையான ஊரடங்கு அமல்படுத்தி, அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார். இந்தியா உட்பட, 40க்கும் மேற்பட்ட நாடுகள், பிரிட்டனுக்கான விமான சேவையை ரத்து செய்துள்ளன.

இந்நிலையில், லண்டனில் உள்ள பல்கலைக்கழக கல்லுாரியின், தொற்று நோய் பரவல் மற்றும் தடுப்பு துறையின், பேராசிரியரும், பிரிட்டன் அரசின் அறிவியல் ஆலோசனை குழுவின் உறுப்பினரும், விஞ்ஞானியுமான ஆன்ட்ரூ ஹேவார்ட் கூறியதாவது: அதிக வீரியத்துடன் உருமாற்றம் அடைந்துள்ள வைரஸ் தொற்று பரவல் அதிகமுள்ள பகுதிகளில் மட்டும், தற்போது கடுமையான ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள், மற்ற பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, இந்த புதிய வகை வைரஸ் கட்டுக்குள் வராது. இப்பகுதிகளை தவிர, பிரிட்டன் முழுவதும் இந்த கொடிய வைரஸ் பரவியுள்ளது; இது, வெளிநாடுகளுக்கும் பரவிக்கூடிய அபாயம் உள்ளது. இந்த பெருந்தொற்று காலத்தின் மிக அபாயமான கட்டத்தை எட்டியுள்ளோம். எனவே, சமயோசிதமாக சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.பிரிட்டன் முழுதும் ஊரடங்கு அறிவித்தால் மட்டுமே, நிலைமையை ஓரளவு கட்டுப்படுத்த முடியும்; இல்லையெனில், ஆயிரக்கணக்கான உயிரிழப்பை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். பிரதமர், நிலைமையை புரிந்து, தேசிய அளவிலான ஊரடங்கை அறிவிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-டிச-202019:02:41 IST Report Abuse
நாரதர் பாராட்டுக்கள் சார்.தினமலர் எச்சரிக்கை மட்டும் விடுக்கவில்லை. ஆலோசனைகளையும் பட்டியலிட்டுள்ளது. எதையும் பொருட்படுத்தாமல் இருந்தால் சாதாரண மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்படும். இல்லை தேர்தல் தான் முக்கியம் என்று கூட்டங்கள் கூடி கும்மியடித்தால் நிலைமை கைமீறி விடும். ஓட்டுப் போட மக்கள் பயமின்றி வர வேண்டும் என்றால் தினமலர் ஆலோசனைகளை செயல் படுத்துதல் அரசுக்கும் மக்களுக்கும் பயன் தரும். மாஸ்க் அணிந்து கொள்தல் மிகவும் அவசியம்.
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
23-டிச-202018:46:06 IST Report Abuse
வெகுளி புதிய ரக கொரோனா தொற்றை தடுக்க தப்லிக்கிகள் உள்ளிட்ட அனைவரும் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும்...
Rate this:
Cancel
Ramki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
23-டிச-202011:26:02 IST Report Abuse
Ramki சுடலை, ப்ளீஸ் நாட்டு நலன் கருதி தனி விமானத்திலாவது தங்கள் குடும்பத்திலுள்ள கனி, காய், உதை, அடி, குத்து, வெட்டு சகிதம் லண்டன் போய்வர வேண்டும். கொரானோவோடு உங்கள் குடும்பமும் ஒழிந்தால் தமிழகத்திற்கு விடி மோட்சம் கிட்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X