திருப்பூர்:'தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஆர்வலர் குழு' என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ள இணைய மற்றும் முகநுால் பக்கம் வரவேற்பை பெற்றுள்ளது.பஸ் பயணிகளின் நலன் கருதி, www.tnstcenthusiasts.com என்ற இணைய பக்கம் உருவாக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது. இதில், சென்னை மாநகர போக்குவரத்து, விரைவு போக்குவரத்து மற்றும் அரசு போக்குவரத்து கழகத்தை ஒருங்கிணைத்து, தகவல்கள் இடம் பெற்றிருக்கும்.
தமிழகத்தில், எத்தனை வகை அரசு பஸ், தொலை துார பஸ் இயக்கப்படுகிறது. கோட்டம், அவற்றின் கீழ் உள்ள பணிமனை, பஸ் வழித்தடம் உள்ளிட்ட முழு விபரமும் இடம் பெற்றிருக்கும்.புதிய வரவுள்ள பஸ்களின் போட்டோ, நேர அட்டவணை, சுற்றுலா, ஆன்மிக தலங்களுக்கு இயக்கப்படும் பஸ் விபரம், அதன் சிறப்பு ஆகியவையும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
சமீபத்தில், அரசு போக்குவரத்து பஸ் ஆர்வலர்கள் இணைந்து, 'தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஆர்வலர் குழு' என்ற பெயரில், காலண்டர் 2021 வெளியிட்டுள்ளனர்.இணையதளத்தில் வலம் வரும் இப்பக்கம், அரசு ஊழியர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. தினசரி ஏதேனும் ஒரு வழித்தட அரசு பஸ் போட்டோவுடன், 1970 முதல் இன்று வரையுள்ள பஸ் போக்குவரத்து குறித்த சுவராஸ்ய தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.