திருவனந்தபுரம்: கேரளாவில், கன்னியாஸ்திரி கொலை வழக்கில், 28 ஆண்டுகளுக்கு பின், பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகியோர் குற்றவாளிகள் என, நீதிமன்றம் அறிவித்தது. இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி திருவனந்தபுரம் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விசாரணை
கேரளாவிலுள்ள கோட்டயத்தில், ஒரு கிறிஸ்தவ பள்ளி வளாக கிணற்றில், கன்னியாஸ்திரி அபயா, 21, கடந்த, 1992ல், பிணமாக கிடந்தார். விசாரணை நடத்திய போலீசார், தற்கொலை என, முடிவுக்கு வந்தனர். பின், இதுதொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் பரிந்துரையின் படி, வழக்கு, சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது. தீவிர விசாரணையில், பாதிரியார் தாமஸ் கோட்டூர் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகியோர், ஒன்றாக இருந்ததை அபயா பார்த்துள்ளார். இதனால், அபயாவின் தலையில் தாமஸ் தாக்கி உள்ளார். இதில் மயக்கம் அடைந்த அவரை கொலை செய்து, தாமசும், செபியும், உடலை கிணற்றில் வீசியது தெரியவந்தது.

இதையடுத்து தாமஸ், செபி மற்றும் உடந்தையாக இருந்ததாக பாதிரியார் ஜோஸ் புத்ரிகாயில் ஆகியோரை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். வழக்கின் விசாரணை திருவனந்தபுரம், சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது; இதற்கிடையே, பாதிரியார் ஜோஸ் புத்ரிகாயில், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

தண்டனை விபரம்
பாதிரியார் தாமஸ், கன்னியாஸ்திரி செபி ஆகியோர் மீதான கொலை வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்ததால், இருவரும் குற்றவாளிகள் என, நீதிபதி அறிவித்தார். அவர்களுக்கான தண்டனை விபரம் இன்று(டிச.,23) அறிவிக்கப்பட்டது. இதில், இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் பாதிரியார் தாமஸ் கோட்டூருக்கு ரூ.6.5 லட்சமும், கன்னியாஸ்திரி செபிக்கு ரூ.5.5 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டது. இதன்படி, கொலை நடந்து, 28 ஆண்டுகளுக்கு பின், குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE