ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வைத்தும், அங்கு நீக்கப்பட்ட 370 சட்டத்தையும் ஒப்பிட்டு விவாதம் செய்வதால் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.
ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, கடந்தாண்டு ஆகஸ்டில் ரத்து செய்யப்பட்டது. மேலும், ஜம்மு - காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரில், மாவட்ட வளர்ச்சி கவுன்சிலுக்கான தேர்தல், சமீபத்தில் நடந்தது. மொத்தமுள்ள, 20 மாவட்டங்களில், தலா, 14 இடங்கள் என, 280 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. இதில், தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட, ஏழு எதிர்க்கட்சிகள் இணைந்து, 'குப்கர் தீர்மானத்துக்கான மக்கள் கூட்டணி' என்ற பெயரில் போட்டியிட்டன. தேசிய கட்சிகளான பா.ஜ., காங்கிரஸ் தனித்து போட்டியிட்டன.
தேர்தல் முடிவுகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் குப்கர் கூட்டணி கட்சிகள் 110 இடங்களை கைப்பற்றும் சூழலில் உள்ளது. தனித்து போட்டியிட்ட பா.ஜ., காங்கிரஸ் முறையே 75, 26 இடங்களை பிடிக்கும் என தெரிகிறது. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது கூட்டணி கட்சிகள் 13 மாவட்டங்களையும், பா.ஜ., ஏழு மாவட்டங்களையும் கைப்பற்றும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் 7 கட்சிகள் இணைந்து போட்டியிட்ட கட்சிகள் வெற்றி பெறும் என்றாலும் தனித்து களம் கண்ட பா.ஜ., 75 இடங்கள் என்ற நிலையுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இம்மாநிலத்தில் பா.ஜ., இதுபோன்று அதிக இடங்களை பெறுவது இதுவே முதல்முறை.

தேர்தல் முடிவுகளை வைத்து ஓமர் அப்துல்லா, மெகபூபா முக்தி போன்ற ஜம்மு காஷ்மீர் மாநில தலைவர்கள், ''இது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. மக்கள் 370 சட்டம் நீக்கத்தை ஏற்கவில்லை என்ற மனநிலையை தான் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன'' என கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சமூகவலைதளங்களில் 370 சட்டம் தொடர்பான கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. அதாவது கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று இருப்பது மூலம் மக்கள் 370 சட்டம் நீக்கத்தை ஏற்கவில்லை. அதன் வெளிப்பாடு தான் இந்த தேர்தல் முடிவுகள். பா.ஜ.,வை ஜம்மு காஷ்மீர் மக்கள் ஏற்கவில்லை என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
அதேசமயம் இதற்கு எதிராகவும், பா.ஜ.,விற்கு ஆதரவாகவும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. அதாவது, 7 கட்சிகள் இணைந்து 110 இடங்களை பிடித்துள்ளது. தனித்து போட்டியிட்ட பா.ஜ. 75 இடங்களை கைப்பற்றி உள்ளது. இது பா.ஜ.,விற்கு கிடைத்த வெற்றி தான். மேலும் அதிக ஓட்டுகளும் பா.ஜ.,விற்கு தான் கிடைத்துள்ளது. இது 370 சட்டம் நீக்கத்தை மக்கள் ஆதரிப்பதையே வெளிப்படுத்துகிறது என சிலர் கருத்து பதிவிட்டுள்ளனர்.
பிரதமரின் சீரிய தலைமையின் கீழ் செயல்படும் பாஜகவின் வளர்ச்சியை ஜம்மு காஷ்மீர் மக்கள் கொண்ட நம்பிக்கையை தான் இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. தேர்தலில், பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இது 370வது பிரிவை ரத்து செய்த பின் மக்கள் தரும் வரலாற்றுத் தீர்ப்பாகும் என சிலர் கருத்து பதிவிட்டுள்ளனர்.
இதுபோன்று இந்த தேர்தல் முடிவுகளையும், காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்துயையும் ஒப்பிட்டு பலரும் கருத்து பதிவிட்டு வருவதால் டுவிட்டரில் #Article370, #J&K, #Jammu&Kashmir ஆகிய ஹேஷ்டாக்குகள் தேசிய அளவில் டிரெண்ட் ஆகின.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE