கோவை:பள்ளி வேனில் சென்ற எல்.கே.ஜி., மாணவிக்கு,பாலியல் தொந்தரவு செய்த டிரைவர் மற்றும் கிளீனருக்கு ஆயுள்சிறை விதித்து,கோவை போக்சோ கோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு அளிக்கப்பட்டது.
கோவை மாவட்டம், காரமடை, கண்ணார் பாளையத்தை சேர்ந்த மாரிமுத்து, 50, பிளிச்சியை சேர்ந்த கோவிந்தராஜ்,37, ஆகியோர், அங்குள்ள தனியார் பள்ளி வேனில் பணியாற்றி வந்தனர். கோவிந்தராஜ் டிரைவராகவும், மாரிமுத்து கிளீனராகவும் இருந்தனர். தினந்தோறும் பள்ளி வேனில் குழந்தைகளை அழைத்து செல்வது வழக்கம்.
கடந்த 2019, ஜன., 29 ல், பள்ளி முடிந்து வீட்டிற்கு குழந்தைகளை அழைத்து சென்றனர். அனைத்து குழந்தைகளும் இறங்கிய பிறகு, எல்.கே.ஜி., படிக்கும் நான்கு வயது சிறுமி, கடைசி ஸ்டாப்பில் இறங்குவதற்கு காத்திருந்தார். அப்போது, இருவரும் சேர்ந்து, சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்தனர். வேனை விட்டு இறங்கிய சிறுமி வீட்டிற்கு அழுது கொண்டே சென்றது. பெற்றோர்கள் விசாரித்த போது, இருவரும் சேர்ந்து பாலியல் தொந்தரவு செய்தது தெரிய வந்தது.
துடியலுார் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து மத்திய சிறையிலடைத்தனர். கோவை போக்சோ சிறப்பு கோர்ட்டில் இருவர் மீது வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி ராதிகா, சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த மாரிமுத்து, கோவிந்தராஜ் ஆகியோருக்கு ஆயுள்சிறை, தலா , 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து இன்று தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு, அரசு சார்பில் நான்கு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE