தமிழக காங்., தலைவர் அழகிரி: தேர்தலை கருதி, கவர்ச்சிகரமான அறிவிப்புகளை, முதல்வர் இ.பி.எஸ்., வெளியிட்டுள்ளார். 2,000 மினி கிளினிக்குகளுக்கு, குறைந்தபட்சம், 3,000 டாக்டர்களை நியமிக்க வேண்டும். அவ்வாறு இன்றி, ஏற்கனவே உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில், பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்களை இங்கு அமர வைப்பதன் வாயிலாக, மொத்த பொது சுகாதார கட்டமைப்பே சீர்குலைந்து விடும். எனவே, கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும்.
'டவுட்' தனபாலு: தமிழக அரசு அறிவித்துள்ள, 2,000 மினி கிளினிக்குகள், பொங்கலுக்கு, 2,500 ரூபாய் பரிசு போன்றவை எல்லாம், தேர்தலை மனதில் வைத்து தான் என்பதில், யாருக்கும், 'டவுட்' இருக்க முடியாது. அதே நேரம், தேர்தலுக்கு இன்னமும், நான்கைந்து மாதங்கள் உள்ளன. அதற்குள் எத்தனை, 'அறிவிப்புகள்' வந்து மலைக்க வைக்கப் போகின்றனவோ என்ற, 'டவுட்டும்' சேர்ந்து வருகிறது!
தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்: தமிழகத்தில், 2,900 பள்ளிகளுக்கு அங்கீகார சான்று வழங்கப்பட்டுள்ளது. அடுத்த, ஆறு மாதங்களில், பல புதிய தொழிற்சாலைகள் தமிழகத்தில் உருவாக உள்ளன. இதன் வாயிலாக, படித்த இளைஞர்கள், 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
'டவுட்' தனபாலு: ஒவ்வொரு தேர்தலின் போதும், பட்ஜெட் தாக்கலின் போதும், இவ்வளவு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என அறிவிப்பது அரசுகளின் வழக்கம். ஆனால், அவ்வாறு புதிய வேலைவாய்ப்புகள் உருவானது, 'டவுட்' தான். அந்த வகையில், புதிய தொழிற்சாலைகளை துவக்கி, 10 லட்சம் பேருக்கு வேலை கிடைப்பது, டவுட்டோ டவுட்டு தான்!
மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர், நடிகர் கமல்: நான் தாமதமாக அரசியலுக்கு வந்து இருக்கிறேன். அரசியலுக்கு வந்தே தீர வேண்டும் என்று வந்துள்ளேன். உலக தரத்தில் திரைப்படங்களை கொடுத்தால் மட்டும் போதாது. என்னை வளர்த்து, ஆளாக்கிய மக்களுக்கு என்னால் முடிந்த நல்லது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் வந்துள்ளேன். என் வாழ்க்கை அர்த்தமுடையதாக இருக்க வேண்டும். தமிழகம் தலை நிமிர வேண்டும் என்று விரும்புகிறேன்.
'டவுட்' தனபாலு: உங்கள் அரசியல் பிரவேசமே, பல, 'டவுட்'டுகளை ஏற்படுத்தியது. அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்த நீங்கள், தொடர்ந்து உங்கள் படங்களுக்கு, குட்டிக் கட்சித் தலைவர்களால் நெருக்கடி கொடுக்கப்பட்டதை அடுத்து, படங்களை எளிதாக வெளியிட ஏதுவாகத் தான், அரசியலில் குதித்தீர்கள் என்ற பேச்சு அடிபடுகிறது. அதை மறைத்து, ரஜினி போல நினைத்து, தமிழகத்தை மாற்றப் போகிறேன் என்கிறீர்களோ என்ற, 'டவுட்' வருகிறதே!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE