சென்னை:பொங்கல் பரிசு, 2,500 ரூபாய் ரொக்கம் வழங்குவதற்காக, ரேஷன் கார்டு எண்ணிக்கை அடிப்படையில், மாவட்ட வாரியாக ஒதுக்கீடு செய்துள்ளதில், சென்னைக்கு, 471 கோடி ரூபாய் ஒதுக்கி, உணவு வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு, பொங்கலை முன்னிட்டு, 2.10 கோடி அரிசி ரேஷன் கார்டுதாரருக்கு, தலா, 2,500 ரூபாய் ரொக்கம், பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்பு, துணிப்பை அடங்கிய பரிசு தொகுப்பை அறிவித்துள்ளது. அவை, ஜன., 4ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன.இதற்காக, ரேஷன் கார்டு எண்ணிக்கை அடிப்படையில், மாவட்ட வாரியாக ஒதுக்கீடு செய்து, உணவு வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது.
அதற்கு ஏற்ப, அவற்றை கடைகளுக்கு வினியோகம் செய்யுமாறு, நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டு எண்ணிக்கையில், சென்னை, கோவை, சேலம், மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்கள், முதல் ஐந்து இடங்களில் உள்ளன. அதன்படி, அனைத்து கார்டுதாரருக்கும் ரொக்க தொகை வழங்க ஒதுக்கியுள்ள, 5,158 கோடி ரூபாயில், சென்னை வடக்கு, 10.32 லட்சம்; தெற்கு, 8.53 லட்சம் என, சென்னை மாவட்டத்தில் உள்ள, 18.85 லட்சம் கார்டுதாரருக்கு வழங்க, 471 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இதுவே, மற்ற மாவட்டங்களை விட, அதிக தொகையாகும்.
இதையடுத்து, கோவையில், 10.09 லட்சம் கார்டுதாரருக்கு வழங்க, 252 கோடி ரூபாயும்; சேலத்தில், 10.06 லட்சம் கார்டுதாரருக்கு வழங்க, 251 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளன. மதுரையில், 8.85 லட்சம் கார்டுதாரருக்கு வழங்க, 221 கோடி ரூபாயும்; திருச்சியில், 7.98 லட்சம் கார்டுதாரருக்கு வழங்க, 199 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடைசி இடத்தில், பெரம்பலுார் உள்ளது. அம்மாவட்டத்தில், 1.81 லட்சம் கார்டுதாரருக்கு வழங்க, 45 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE