சென்னை:'தி.மு.க., ஆட்சி அமைந்தவுடன், குப்பை கொட்ட கட்டணம் ரத்து செய்யப்படும்' என, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:குப்பை கொட்ட கட்டணம் என, சென்னை மாநகராட்சி அறிவித்துள்ள கட்டணங்கள், கொரோனா பேரிடரில் சிக்கிய மக்கள், அதன் அவதிகளில் இருந்து மீள வகையறியாது தவித்துக் கொண்டிருக்கும் போது, அவர்களின் அடிவயிற்றில் சுக்குமாந்தடியால் சுழற்றித் தாக்குதல் தொடுத்திருக்கிறது.கொரோனா பாதிப்பிலும், மின்கட்டண வசூல், சொத்து வரிக்கு அபராதம், இப்போது குப்பை கொட்ட கட்டணம் என, அ.தி.மு.க., அரசின் நிர்வாக அலங்கோலங்கள் அடுத்தடுத்து, வந்து படமெடுத்தாடி, சந்தி சிரிக்க வைக்கிறது.
வாழ்வாதாரத்தைத் தொலைத்த மக்களும், பொருளாதார இழப்புகளைச் சந்தித்த சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களும் இன்னும் முறையாகவோ, முழுமை யாகவோ, மூச்சு விட துவங்கவில்லை. பல தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி வரும் வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், திரையரங்குகள், உணவகங்கள் அனைத்தும், இப்போது தான் மெல்ல மெல்ல உயிரோட்ட பாதைக்கு நகர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.
அதற்குள் மீண்டும் ஒரு பேரிடருக்குள் குப்புற தள்ளுவது போல, குப்பை போடுவதற்கான கட்டணத்தை அறிவித்து இருப்பது, அ.தி.மு.க., அரசினர் மனம் குப்பை மேடாக மாறிவிட்டதையே காட்டுகிறது. இந்த குப்பை கொட்டக் கட்டணம் என்ற அறிவிப்பை உடனே திரும்ப பெற வேண்டும். முதல்வர் உத்தரவுக்கு, உள்ளாட்சித்துறை அமைச்சர் கட்டுப்படா விட்டால், தி.மு.க., ஆட்சி அமைந்தவுடன், இந்த குப்பை கொட்டுவதற்கான கட்டணம் ரத்து செய்யப்படும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.
'தமிழகம் மீளும்'
தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிக்கை:தேசிய விவசாயிகள் தினத்தில், விவசாயிகள் விரும்பாத, மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுகிறேன் என்று அறிவித்து, நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை பாதுகாக்க, பிரதமர் மோடி, எவ்வித தயக்கமும்
இன்றி முன் வரவேண்டும். பத்து நாட்களில், 16 ஆயிரத்து, 500 கிராமங்களில், கிராமசபை, வார்டு கூட்டங்களை தி.மு.க., நடத்து கிறது. ஸ்ரீபெரும்புதுார் தொகுதியின் குன்னம் ஊராட்சியில் நான் பங்கேற்றேன். அ.தி.மு.க.,வை நிராகரிப்போம் என, தமிழகம் தயாராகி விட்டது. அதில் பங்கேற்ற ஒவ்வொருவரின் ஆதரவிலும் இதைப் புரிந்து கொள்ள முடிகிறது. தமிழகம் மீளும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE