உடுமலை : உடுமலையில் பெண்களுக்கான திருமண உதவித்தொகை திட்டத்தில், மூன்றாண்டுகளாக காத்திருக்கும் அவலத்தை அரசு கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சமூக நலத்துறையின் சார்பில் திருமண உதவித்தொகை திட்டம் செயல் படுத்தப்படுகிறது. ஒன்றிய அலுவலகங்களில், இதற்கான விண்ணப்பங்கள் பெற்று, சேவை மையங்களில், 'ஆன்லைனில்' விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டத்தில், பதிவு வரிசைப்படி உதவித்தொகை வழங்கப்படுகிறது.உடுமலையில், 2017ல் விண்ணப்பித்த பயனாளிகளுக்கு இத்திட்டத்தில் உதவித்தொகை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அந்த ஆண்டில், 150 பேர் விடுபட்டுள்ளனர்.
இந்த விடுபட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்காமல், அடுத்த ஆண்டிற்கான பயனாளிகளுக்கு உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கமும் வழங்கப்பட்டது.இருப்பினும், 2018ம் ஆண்டிலும் முழுமையான பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை. நடப்பு நிதியாண்டில், மே மாதம் வரை, மொத்தமாக, 820 பயனாளிகள் இத்திட்டத்தில் பதிவு செய்து ஆண்டு கணக்கில் காத்திருக்கின்றனர்.
திட்டத்தில் விண்ணப்பிப்போரின் விபரங்களை பதிவேற்றுவதற்கும், விரைவில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான தொழில்நுட்ப வசதிகளை செய்வதிலும், அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது.ஒவ்வொரு ஆண்டும் திட்டத்தில் பதிவு செய்துவிட்டு, இரண்டாண்டு வரை காத்திருந்து தான்பயனாளிகள் இந்த உதவித்தொகையைபெறுகின்றனர்.
மேலும், சட்டசபை தேர்தலுக்கான பணிகள் அனைத்துக்கட்சிகளின் சார்பிலும் துவக்கப்பட்டுள்ளதால், இத்திட்டங்களை பயன்படுத்தி, அரசியல் பிரமுகர்கள் தலையீடுக்கும் வாய்ப்பு உள்ளது.நாள்தோறும், பதிவு செய்த பயனாளிகள் உடுமலை ஒன்றிய அலுவலகத்துக்கு திட்டம் குறித்து விசாரித்து ஏமாற்றத்துடனே திரும்பச்செல்கின்றனர்.பயனாளிகளுக்கான உதவித்தொகையை தாமதமின்றி, விடுபட்ட அனைவருக்கும் வழங்க அரசும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயனாளிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE