மடத்துக்குளம் : மடத்துக்குளம் பகுதியில் குலைநோய் தாக்கிய நெல்வயல்களை, வேளாண்துறை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்து, நோய்த்தடுப்பு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு பரிந்துரைத்தனர்.
மடத்துக்குளம் வட்டாரத்தில், அமராவதி அணை பாசனத்தில், நடப்பு சீசனில், 7 ஆயிரம் ஏக்கர் வரை, நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இச்சாகுபடியில், குலைநோய்த்தாக்குதல் பரவுவதாக விவசாயிகள் தரப்பில், தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, நோய் பாதித்த வயல்களை, மாவட்ட வேளாண் இணை இயக்குனர் மனோகரன், துணை இயக்குனர் வடிவேல், கோவை வேளாண்மை பல்கலை., விஞ்ஞானி ஆனந்தராஜா ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.
வட்டார வேளாண்துறை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி கூறியதாவது: நெல் சாகுபடியில், சில இடங்களில் குலை நோய் தாக்குதல் காணப்படுகிறது. காற்றில் ஈரப்பதம் 90 சதவீதம் இருக்கும் போதும் குலை நோய் தாக்குதல் அதிகமாகிறது.நோய்க்கு அடிப்படைக் காரணமான பூஞ்சாண விதைகள் காற்றில் வேகமாக பரவக்கூடியதாகும். நோய் தாக்கிய இலைகளின் மையப்பகுதியில் புள்ளிகள் காணப்படும்.வெள்ளை இதனை சுற்றி சாம்பல் மற்றும் பழுப்பு நிறமாக கண் வடிவத்தில் புள்ளிகள் இருக்கும். நோய் பாதித்த சிலநாளில் பயிர் பழுப்பாக மாறி கருகிவிடும்.பாதிப்பு 20 சதவீதமாக இருக்கும்போதே கட்டுப்படுத்த வேண்டும். தவறினால் ஏழு நாட்களில் வயல் முழுவதும் பரவி விடும். நோய் பாதித்த நெல் விதைகளை இருப்பு வைக்கவோ அடுத்த சாகுபடிக்கு பயன்படுத்தவோ கூடாது.
நோய் பாதித்தால் பூக்கும் பருவம் தாமதப்பட்டு நெல் மணிகள் சிறிதாகி பால் பிடிக்காமல் மகசூல் இழப்பு ஏற்படும். நோயை கட்டுப்படுத்த வேப்ப எண்ணெய் கரைசல், 10 லிட்டர் தண்ணீருக்கு 15 மில்லி அளவில் கலந்து ஒரு ஏக்கருக்கு 200 மில்லி தெளிக்கலாம்; அல்லது எக்சனசோல் 10 லிட்டர் நீருக்கு ஒரு கிராம் கலந்து தெளிக்கலாம். களைகளை அகற்றி வரப்புகளை சுத்தமாக வைக்க வேண்டும்.
ஒரு லிட்டர் தண்ணீரில் 2 கிராம் மென்கொசெப் கலந்தோ அல்லது ஒரு லிட்டர் தண்ணீரில் 2 கிராம் கிட்டாசிம் கலந்தோ தெளிக்கலாம்.நோய் அதிகமாக பரவி னால் அமோனியம் சல்பேட், யூரியா போன்ற தழைச்சத்து உரங்களை குறைந்தளவு பயன்படுத்தலாம். குலைநோய் அறி குறிகள் தென்பட்டால் விவசாயிகள் உடனடியாக வேளாண்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE