பொள்ளாச்சி : ரயில் டிக்கெட் முன்பதிவை ரத்து செய்யும் பயணிகளிடம், கட்டணத்தை திரும்ப அளிக்க, ரயில்வே நிர்வாகம் தொலைபேசி வாயிலாக வங்கி விபரங்களை கேட்பதில்லை. அது போல வரும் அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம்,என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை ரயில்வே கோட்டம் சார்பில் பயணிகள் நலன் கருதி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:தெற்கு ரயில்வேயில், டிக்கெட் முன்பதிவு செய்து, பிறகு அதை ரத்து செய்யும் போது, செலுத்திய கட்டணம் பயணிகளுக்கு திரும்ப அளிக்கப்படுகிறது.இந்த நடைமுறையில், பயணிகளுடைய வங்கிக் கணக்கு உட்பட்ட விபரங்களை ரயில்வே நிர்வாகம் தொலைபேசி வாயிலாக ஒருபோதும் கேட்பதில்லை.மோசடிக் கும்பலை சேர்ந்த சிலர், இதுபோன்ற தகவல்களை தொலைபேசி வாயிலாக கேட்பதாக புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள், தொலைபேசி வாயிலாக வங்கி கணக்கு விபரங்கள், ஏ.டி.எம்., கார்டு, கிரெடிட் கார்டு எண்கள், 'ஆன்லைன்' பரிவர்த்தனைக்கான கடவுச் சொல், ஏ.டி.எம்., ரகசிய எண் ஆகியவற்றை தெரிவிக்க வேண்டாம்.இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக இணையதளம் வாயிலாக பதிவு செய்த பயணச் சீட்டுகளுக்கான கட்டணத் தொகை, பயணம் ரத்தாகும் போது பயணிகளுடைய வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.ரயில்வே ஸ்டேஷன்களில் முன்பதிவு செய்யப்படும் பயணச்சீட்டுக்கான கட்டணம், உரிய காலக்கெடுவில் ஸ்டேஷன் கவுன்டரிலேயே திரும்ப தரப்பட்டு வருகிறது.எனவே, தனி நபர் வங்கிக் கணக்கு சம்பந்தமான விஷயங்களை யாரிடமும் தெரிவிக்க வேண்டியதில்லை. ரயில்வே நிர்வாகத்தின் பெயரை பயன்படுத்தி, இந்த தகவல்களை யாராவது தொலைபேசியில் கேட்டால், ரயில்வே பயணிகள் உதவி தொலைபேசி எண், 138ல் புகார் செய்யலாம்.இவ்வாறு, அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE