மறைந்த காங்கிரஸ் தலைவர், அகமது படேல், மிகவும் போராடி வெற்றி பெற்ற ராஜ்யசபா எம்.பி., சீட், வெகு எளிதாக பா.ஜ., வசம் போகவுள்ளதால், காங்கிரஸ் கலக்கம் அடைந்துள்ளது.
காங்கிரஸ் பொருளாளராகவும், அக்கட்சியின் அரசியல் ரீதியிலான அத்தனை நடவடிக்கைகளின் மூளையாகவும் இருந்தவர், அகமது படேல், 71. சோனியா குடும்பத்தின் தீவிர விசுவாசியான இவர், கடந்த மாதம் காலமானார்.
அறிவிப்பு
இவரது ராஜ்யசபா எம்.பி., பதவிக்காலம், 2023 ஆகஸ்ட், 18 வரை உள்ளது. இவரது மறைவை அடுத்து, அப்பதவி காலியாக உள்ளதாக, கடந்த மாதம், 25ல் அறிவிப்பு வெளியானது. இவரைப் போலவே, குஜராத்திலிருந்து வெற்றி பெற்று, ராஜ்யசபா எம்.பி.,யான அபய் பரத்வாஜ், கடந்த, 1ம் தேதி காலமானார். பா.ஜ.,வைச் சேர்ந்த இவரது பதவிக்காலம், வரும், 2026 ஜுன் 1 வரை உள்ளது.
இந்த இரண்டு ராஜ்யசபா இடங்களுக்குமான தேர்தல், ஒன்றாக நடத்தப்படுமா அல்லது தனித்தனியாக நடத்தப்படுமா என்ற கேள்வி, மிகப் பெரிய பிரச்னையாக எழுந்துள்ளது. குஜராத் சட்டசபையில், 111 பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களும், 65 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களும் உள்ளனர். ஒரு எம்.பி., வெற்றி பெற வேண்டுமெனில், 50 சதவீத ஓட்டுகளையோ அல்லது 88 ஓட்டுக்களையோ பெற்றாக வேண்டும்.இரண்டு இடங்களுக்கான ராஜ்யசபா இடைத்தேர்தல்களை, ஒரே நேரத்தில் நடத்தினால், காங்., ஒரு இடத்தில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
தனித்தனியாக அறிவிப்பு வெளியிட்டு, வெவ்வேறு தேதிகளில் நடத்தினால், இரண்டு இடங்களிலும் பா.ஜ., வெற்றி பெற்றுவிடும். இதை கணக்கிட்டு, ஒரே மாநிலத்தில், அடுத்தடுத்து இருவர் காலமாகியுள்ளதால், இரு இடங்களுக்கும் சேர்த்து ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டுமென காங்கிரஸ் விரும்புகிறது. ஆனால், 'இரண்டு எம்.பி.,க்களும், வெவ்வேறு தேதிகளில் காலமாகியுள்ளார்கள்; வெவ்வேறு தேர்தல் அறிவிப்புகளுடன் தான் தனித்தனியே இடைத்தேர்தல்கள் நடத்த வேண்டும்' என, பா.ஜ., வலியுறுத்தி வருகிறது.
தேர்தல்
இந்நிலையில், வெவ்வேறு தேதிகளில் தேர்தல் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதித்துள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் இது குறித்து இறுதி உத்தரவை வழங்காமல், வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே, 2009ல் இருந்தே, ராஜ்யசபா இடைத்தேர்தல்களை, வெவ்வேறு தேதிகளில் நடத்தும் வழக்கம் தொடர்கதையாக உள்ளது.அதன்படி, தற்போதைய குஜராத் இடைத்தேர்தல் விவகாரத்திலும், தனித்தனியே தான் தேர்தல்கள் நடத்தப்படும்.
எனவே, 'அகமதுபடேல், 2017ல், மிகவும் போராடி வெற்றி பெற்ற ராஜ்யசபா சீட் உட்பட, இரண்டு இடங்களையுமே பா.ஜ., கைப்பற்றுவது உறுதி' என, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
--நமது டில்லி நிருபர்-
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE