சென்னை :ரஜினி நடித்து வந்த, அண்ணாத்த படக் குழுவில், நால்வருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், ஐதராபாதில் நடந்து வந்த படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.ரஜினிக்கு நடந்த பரிசோதனையில், அவருக்கு தொற்று இல்லை என்பது தெரிய வந்துள்ளதால், கட்சி அறிவிப்பில் தாமதம் இருக்காது என, எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினி, நயன்தாரா, மீனா, குஷ்பு நடிக்க, சிவா இயக்கும், அண்ணாத்த படப்பிடிப்பு, தெலுங்கானா மாநிலம், ஐதராபாதில் உள்ள, ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில், 14ம் தேதி துவங்கியது.\ கொரோனா பாதுகாப்பு வளையத்துடன், சில நாள் படப்பிடிப்பு நடந்த நிலையில், படக் குழுவில், நால்வருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. ரஜினி உள்ளிட்டோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், ரஜினி உள்ளிட்ட படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர் - நடிகையருக்கு, தொற்று ஏற்படவில்லை என, தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
ரஜினியின் கட்சி அறிவிப்பு நிகழ்ச்சி, வரும், 31ம் தேதி, சென்னையில் நடக்க உள்ளது. இதற்காக, 29ம் தேதிக்குள் படப்பிடிப்பை முடித்து, சென்னை திரும்ப, ரஜினி திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் படக் குழுவினருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், ரஜினி தன்னை தனிமைப்படுத்தி கொண்டதாகவும், ஐதராபாதில் தங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, தன் உடல்நிலையை காரணம் காட்டி, அரசியலுக்குள் நுழைவதை தாமதப்படுத்தி வந்த ரஜினி, தற்போது கொரோனாவில் இருந்து நுாலிழையில் தப்பியுள்ளார். அதனால், அவரது அரசியல் நடவடிக்கைகளுக்கு, எந்த தடையும் இருக்காது என, ரசிகர் மன்ற வட்டாரம் தெரிவித்தது.