பிரிட்டனிலிருந்து வந்தவர்கள் யார் யார்? | Dinamalar

பிரிட்டனிலிருந்து வந்தவர்கள் யார் யார்?

Updated : டிச 24, 2020 | Added : டிச 23, 2020 | கருத்துகள் (17) | |
சென்னை : பிரிட்டனில் இருந்து, தமிழகம் வந்தவர்கள் யார் யார் என, சல்லடை போட்டு தேடும் பணியை, அரசு துவக்கி உள்ளது. 'சமீபத்தில், வெளிநாடுகள் சென்று திரும்பியவர்கள் தாமாகவே முன்வந்து, பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்' என, பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது. பிரிட்டனில் உருவான, புதிய தொற்றால், தமிழகம் பாதிக்கப்படாமல் தடுக்க, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, தலைமை
பிரிட்டன், கொரோனா, தமிழக அரசு,ராதாகிருஷ்ணன்,  தலைமை செயலர், சுகாதார செயலர், கலெக்டர்கள், சல்லடை,

சென்னை : பிரிட்டனில் இருந்து, தமிழகம் வந்தவர்கள் யார் யார் என, சல்லடை போட்டு தேடும் பணியை, அரசு துவக்கி உள்ளது. 'சமீபத்தில், வெளிநாடுகள் சென்று திரும்பியவர்கள் தாமாகவே முன்வந்து, பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்' என, பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.

பிரிட்டனில் உருவான, புதிய தொற்றால், தமிழகம் பாதிக்கப்படாமல் தடுக்க, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, தலைமை செயலர் சண்முகம், மாவட்ட கலெக்டர்களுடன், நாளை மறுநாள் அவசர ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில், கொரோனா பாதிப்பு, எட்டு லட்சத்தை கடந்துள்ளது. தொற்று குறைந்து வருவதால், பொது மக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளி பின்பற்றாமலும் சுற்றி வருகின்றனர். இதனால், இரண்டாம் கட்ட தொற்று பரவும் என, சுகாதாரத் துறை ஏற்கனவே எச்சரித்துள்ளது. இந்நிலையில், பிரிட்டனில் கொரோனா தொற்று உருமாற்றம் பெற்றுஉள்ளது.


70 சதவீதம் அதிகரிப்பு


இதனால், தொற்று பரவல் வேகம், 70 சதவீதம் அதிகரித்துள்ளதால், பிரிட்டன் நாட்டுடனான விமான சேவையை, மத்திய அரசு, வரும் 31ம் தேதி வரை ரத்து செய்து உள்ளது. ஆனாலும், பிரிட்டனில் இருந்து, துபாய், சிகாகோ வழியாக, பலர் நாடு திரும்பி வருகின்றனர். அதன்படி, இரண்டு நாட்களில் வந்த, 30க்கும் மேற்பட்டோரில், ஒருவருக்கு தொற்று ஏற்பட்டு, சென்னை, கிண்டி கொரோனா சிறப்பு மருத்துவமனையில், தனி அறையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு, புதிய ரக தொற்று பாதிக்கப்பட்டு உள்ளதா என கண்டறிய, அவரது ரத்தம் மற்றும் சளி மாதிரிகள், மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள, புனே ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவுகள், ஓரிரு நாட்களில் வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அவருடன் வந்தவர்கள், தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.


புதிய வைரஸ்


இதையடுத்து, நவ., 25ல் இருந்து, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து, தமிழகம் வந்த, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குறித்த விபரங்களை, தமிழக சுகாதாரத் துறை மற்றும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சேகரித்து வருகின்றன. இவர்களை கண்டுபிடித்து, அவர்களுக்கு பரிசோதனை செய்து, தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தினால் தான், புதிய வைரஸ் பரவலை தடுக்க முடியும். அதனால், பிரிட்டனில் இருந்து யார் யார் வந்தனர் என்பதை, சல்லடை போட்டு தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

இதற்கிடையே, புதிய ரக தொற்று பரவலை கட்டுப்படுத்துவது குறித்து, மாவட்ட கலெக்டர்களுடன், தலைமை செயலர் சண்முகம், நாளை மறுநாள், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். அதைத் தொடர்ந்து, ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து, முதல்வர் இ.பி.எஸ்., 28ல், மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டில் உள்ளது. புதிய ரக தொற்று பரவலை தடுக்க, அனைத்து நடவடிக்கையும், அரசு எடுத்து வருகிறது. அதன்படி, அந்தந்த விமான சேவை நிறுவனங்களுடன் இணைந்து, வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் குறித்த விபரங்களை சேகரித்து வருகிறோம். கிடைக்கப் பெறும் விபரங்கள் அடிப்படையில், ஒவ்வொரு நபராக தொடர்பு கொண்டு, உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளதா என்பது கேட்டறியப்படும். தேவைப்படும் நபர்களுக்கு, ஆர்.டி.பி.சி.ஆர்., கருவி வாயிலாக, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

பிரிட்டன் போன்ற நாடுகளில் இருந்து வந்தவர்கள், தாங்களாகவே முன்வந்து, தங்கள் விபரங்களை அளிக்க வேண்டும். கொரோனா தொற்றில் இருந்து, உங்களையும், குடும்பத்தாரையும், பொது மக்களையும் பாதுகாக்கும் வகையில், அரசு செயல்படுகிறது. எனவே, வெளிநாடு சென்று வந்த விபரங்களை, யாரும் மறைக்க வேண்டாம். உடல் உபாதைகள் இருப்பின், அரசின், '104' என்ற எண்ணை அழைக்கவும். உங்களுக்கான மருத்துவ உதவிகள், உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொது மக்கள் பதற்றம் அடையாமல், முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை தவறாமல் பின்பற்ற வேண்டும்.இவ்வாறு, செல்வவிநாயகம் கூறினார்.


கோட்டை விட்டது அரசு!


சீனாவின் வூகான் நகரில் பரவிய கொரோனா தொற்று, தமிழகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என, ஆரம்பத்தில், அரசு மெத்தனம் காட்டியது. மார்ச் மாதம் பரவ துவங்கிய கொரோனா தொற்று, ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய, ஐந்து மாதங்களில், பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த தொற்றை, அலோபதி மற்றும் இந்திய மருத்துவ முறை என, ஒருங்கிணைந்த சிகிச்சை முறை வாயிலாக, தமிழக அரசு கட்டுப்படுத்தியது. தொற்று குறைந்து வரும் நிலையில், ஆரம்பத்தில் செய்த அதே தவறை, அரசு செய்துள்ளது.

தொற்று குறைந்ததால், உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான நிலையங்களில், தமிழக சுகாதாரத் துறை மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டிருந்த, கொரோனா பரிசோதனை மற்றும் விபரங்கள் சேகரிக்கும் மையங்கள், செப்., மாதத்துடன் மூடப்பட்டன. இதனால், அந்தந்த நாடுகளில் பெற்று வந்த, 'தொற்று இல்லை' என்பதற்கான சான்றை மட்டுமே வைத்து, வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். சான்று எடுத்து வராதவர்கள், ஏழு முதல், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.இதனால், அக்டோபர், நவம்பர் மாதங்களில் வந்தவர்கள் குறித்த விபரங்களை சேகரிக்க, அரசு தவறி விட்டது.

பிரிட்டனில் புதிய ரக தொற்று பரவி இருப்பதால், அவர்களின் விபரங்களை சேகரிக்கும் பணியை, தற்போது அவசரமாக துவங்கி உள்ளது. பிரிட்டனில் உருவெடுத்துள்ள புதிய ரக தொற்று பரவல், செப்டம்பரில் துவங்கி, டிச., மாதத்தில் அதிகரித்துள்ளது. இதற்கு, இடைப்பட்ட மாதங்களில், புதிய ரக தொற்றுடன், யாராவது தமிழகம் வந்திருந்தால், அடுத்து ஒரு பெருந்தொற்று பாதிப்பை, தமிழக மக்கள் சந்திக்கும் சூழல் ஏற்படும் என, சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.


கைகொடுத்தது 'இ- - பாஸ்!'


தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:பிரிட்டன் நாட்டில் இருந்து, தமிழகத்திற்கு, நவ., 25ம் தேதியில் இருந்து வந்தவர்கள் விபரங்களை, 'இ- பாஸ்' நடைமுறையை பின்பற்றி, அனைத்து விபரங்களையும் சேகரித்து உள்ளோம். அதன்படி, 2,805 நபர்கள் விபரங்களை, தமிழக டி.ஜி.பி.,க்கும், மாவட்ட கலெக்டர்களுக்கும் கொடுத்துள்ளோம். அவர்கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்கள் அனைவருக்கும், ஆர்.டி.பி.சி.ஆர்., கருவி வாயிலாக பரிசோதனை செய்யப்படும். இரண்டு நாட்களில் பிரிட்டனில் இருந்து, 37 பேர், தமிழகம் வந்துள்ளனர். அவர்களில், 33 பேரின் பரிசோதனை முடிவுகள் வந்துள்ளன. ஒருவர் தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெறுகிறார்.

அதேபோல், வெளிநாடுகளில் இருந்து வந்த அனைவரின் விபரங்களையும், இ- - பாஸ் நடைமுறை வாயிலாக சேகரித்து உள்ளோம். இவர்களை, அந்தந்த சுகாதார ஆய்வாளர், காவல் துறை அதிகாரி, உள்ளாட்சி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இனி வருபவர்களும், இதே நடைமுறை பின்பற்றி கண்காணிக்கப்படுவர். வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என, அனைவரின் விபரங்களையும் சேகரித்து கண்காணிக்கிறோம். பொது மக்கள் அச்சம் அடைய வேண்டாம். முகக் கவசம், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். ஊரடங்கில் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து, மாவட்ட கலெக்டர்கள், மருத்துவ நிபுணர்கள், அமைச்சர்கள் ஆகியோருடன் ஆலோசித்து, சூழலுக்கு ஏற்ப, முதல்வர் முடிவெடுப்பார்.இவ்வாறு, ராதாகிருஷ்ணன் கூறினார்.


ஊரடங்கு நீட்டிப்பா? 28ல் முதல்வர் முடிவு!


தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வரும் நிலையில், புதிய ரக வைரஸ் நுழையாமல் இருக்க, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், அரசு எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.இது குறித்து, வரும், 28ம் தேதி, மருத்துவ நிபுணர்களுடன், சென்னை, தலைமைச் செயலகத்தில், முதல்வர் இ.பி.எஸ்., ஆலோசனை நடத்த உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X