கோஹிமா:நாகாலாந்தில் அமைதி ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு உதவும் வகையில், போர் நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக, என்.எஸ்.சி.என்.கே., எனப்படும் பிரிவினைவாத அமைப்பு அறிவித்துள்ளது. பேச்சு நடத்துவதற்கு தயாராக இருப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான, நாகாலாந்தில், முதல்வர், நீபு ரியோ தலைமையிலான, தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி அரசு அமைந்துள்ளது. இங்கு நீண்டகாலமாக, பிரிவினைவாத பிரச்னை உள்ளது. இதற்கு தீர்வுகாணும் வகையில், பிரிவினைவாத அமைப்புகளுடன் பல சுற்று பேச்சு நடந்து வருகிறது.
என்.எஸ்.சி.என்.ஐ. எம்., என்ற அமைப்புடன், 18 ஆண்டுகளில், 80 சுற்று பேச்சுக்குப் பிறகு, 2015ல் உடன்படிக்கை ஏற்பட்டது.இந்நிலையில், என்.எஸ்.சி.என்.கே., என்ற அமைப்பின் தலைவர், நிகி சுமி, வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:நாகாலாந்தில் அமைதி ஏற்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். மக்களின் விருப்பம், எதிர்பார்ப்புகளை மதிக்கும் வகையில், அமைதி நடவடிக்கைகளில் அரசுக்கு ஒத்துழைக்க தயாராக உள்ளோம்.
கடந்த சில ஆண்டுகளாக, மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. அதனால், போரை நிறுத்தி, அமைதி பேச்சுக்கு தயாராக உள்ளோம். இது குறித்து அரசுக்கு தெரியபடுத்தியுள்ளோம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.இந்த அமைப்பின் முடிவுக்கு, நாகாலாந்து அரசு வரவேற்பு தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE