சென்னை:ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரரை, வாலிபர் ஒருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம், சென்னையில் அரங்கேறியுள்ளது.
பாதுகாப்புக்கு இருந்த போலீசாருக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது, சென்னையில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து, ரயில்களில் கல்லுாரிக்கு வந்து செல்லும் மாணவர்கள் சிலர், ரவுடிகளை போல செயல்பட்டு வந்தனர்.ஓடும் ரயில்களில் படிகளில் தொங்கியபடி பயணிக்கும் இவர்கள், பிளாட்பாரங்களில் கத்தியை உரசி, தீப்பொறி பறக்கச் செய்வது, மற்ற கல்லுாரி மாணவர்களை அரிவாளால் வெட்டுவது என, அட்டூழியம் தொடர்ந்தது.
இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோரை அடையாளம் கண்ட போலீசார், பெற்றோர் முன்னிலையில் அறிவுரை வழங்கினர். பல முறை ரவுடித்தனம் செய்த மாணவர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்; சிலர் கைது செய்யப்பட்டனர். இதுபோன்ற நடவடிக்கை காரணமாக, மாணவர்களின் ரவுடித்தனம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதேபோல, பஸ்களில் ரகளை செய்து வந்த, 'ரூட் தல' மாணவர்களின் கொட்டமும் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் அரிவாள் கலசாரம் முடிவுக்கு வந்தபாடில்லை.முன்பெல்லாம், ரவுடிகள், கூலிப்படையினர் அரிவாளுடன் சுற்றுவர். தற்போது, சாதாரணமான வாலிபர்கள் கூட அரிவாள், கத்தியுடன் சுற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களால் பெரும் ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
அதற்கு ஏற்ப, இம்மாதம், 20ம் தேதி, காலை, 5:40 மணிக்கு சென்னை கடற்கரை - வேளச்சேரி மேம்பால ரயில் பாதையில் உள்ள, பெருங்குடி நிலையத்தில், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த, ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர் கமலாகர் பாண்டே பணியில் இருந்தார். அப்போது, ரயில் நிலையத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறையில், வெளி நபர் துணி வைத்துள்ளார். அவரை கமலாகர் பாண்டே கண்டித்துள்ளார். ஆத்திரமடைந்த அந்த நபர், போலீஸ்காரரின் கை மற்றும் கன்னத்தில், அரிவாளால் வெட்டிதப்பினார்.
இதுகுறித்து, எழும்பூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் பத்மகுமாரி தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில், காவலரை வெட்டியவர், சென்னை திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பத்தைச் சேர்ந்த ஷாம், 20, என்பது தெரிய வந்தது. இவரை போலீசார் நேற்று கைது செய்தனர். ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது, சென்னைவாசிகளை அச்சம் அடைய வைத்துள்ளது.
பொதுவாகவே, எம்.ஆர்.டி.எஸ்., முறையில் இயங்கும் வேளச்சேரி முதல் தண்டையார்பேட்டை வரையிலான நிலையங்களில், பெரும்பாலானவற்றில், காலை 9:00 மணிக்கு முன்பாகவும், மதிய நேரத்திலும், இரவு நேரத்திலும், மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படும்.இது அச்சத்தை ஏற்படுத்துவதாக இருந்ததால், ரயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இது ஓரளவு அச்சத்தை நீக்கியது.
ஆனால், தற்போதைய சம்பவம், பொதுமக்களுக்கு அச்சத்தை மீண்டும் உருவாக்கி, உயிர் பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது.இதுபோன்ற சம்பவங்களை முளையிலேயே கிள்ளி எறிந்து, குற்றங்களில் ஈடுபடுவோர் மீது, குண்டர் சட்டம் ஏவ வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE