அன்னுார் : மாத சம்பளம் உயர்த்தப்பட்டதற்கு துாய்மை காவலர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில், அனைத்து கிராம ஊராட்சிகளிலும், 2015ம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மை திட்டம் துவக்கப்பட்டது. இந்த திட்டத்தில் ஊராட்சிகளில், துாய்மை காவலர்கள் நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் பேட்டரி வாகனங்களில், வீடு வீடாக சென்று, குப்பை பெற்று தரம் பிரித்து, மக்கும் குப்பையில் உரம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அன்னுார் ஒன்றியத்தில், 126 துாய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அவர்கள் கூறியதாவது:நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, தினசரி சம்பளமாக, 256 ரூபாய் வழங்கப்படுகிறது. ஆனால் மாதத்தில் 26 நாட்கள் பணிபுரியும் எங்களுக்கு, 2600 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. தற்போது ஆயிரம் ரூபாய் உயர்த்தி 3 ஆயிரத்து 600 ரூபாய் வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் மண்புழு உரம் மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்டு விற்கப்படும் பொருட்களின் மதிப்பில் 50 சதவீதத்தை காலாண்டுக்கு ஒரு முறை எங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது.எனினும், தற்போதைய விலைவாசிக்கு மாத சம்பளம் 3 ஆயிரத்து 600 ரூபாய் மிகவும் குறைவானது. எனவே, 100 நாள் வேலை திட்டத்தில் வழங்கப்படும் தினசரி சம்பளத்தை கணக்கிட்டு, எங்களுக்கு மாத சம்பளம் நிர்ணயிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE