சேலம்:வறுமையின் பிடியில் சிக்கிய எம்.ஜி.ஆர்., ரசிகரை, கட்சியினர் கண்டுகொள்ளவில்லை. முதியோர் பென்ஷனும் கிடைக்காத நிலையில், தான் சேகரித்து வைத்திருந்த, எம்.ஜி.ஆர்., படங்களை விற்று வருகிறார்.
சேலம், பொன்னம்மாபேட்டை புத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தங்கவேல், 78; மனைவி பாப்பா, 75. மூன்று மகன்கள், மகள் இருந்தபோதும், தனிமையில் வாழ்கின்றனர். எம்.ஜி.ஆர்., ரசிகரான தம்பதி, அவர் நடித்து வெளியான படங்களை பார்க்க தவறுவதில்லை. அவரது புகைப்படங்களை சேகரிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். இதுவரை, 3 லட்சம் படங்களை சேகரித்துஉள்ளனர்.
தங்கவேல், செங்கல் சூளை நடத்திய நிலையில், அதில் வந்த வருமானத்தில், எம்.ஜி.ஆர்., திரைப்படத்தை பார்ப்பதிலும், அவரது வித்தியாசமான படங்களை சேகரிப்பதிலும் செலவிட்டு உள்ளார். அ.தி.மு.க., துவங்கிய காலத்திலேயே, உறுப்பினராக சேர்ந்த அவர், தன் கைகளில், எம்.ஜி.ஆர்., - இரட்டை இலை சின்னத்தை பச்சை குத்தியுள்ளார்.இடுப்பு எலும்பில் பாதிப்பு ஏற்பட்டதால், செங்கல் சூளை நடத்துவதை விட்டார்.
கொரோனா காலத்தில்,வேலை கிடைக்காததால், குடும்பத்தை நடத்த வேறு வழியின்றி, தான் சேகரித்து வைத்திருந்த, எம்.ஜி.ஆர்., படங்களை தள்ளுவண்டியில் வைத்து விற்று, குடும்பம் நடத்துகின்றனர்.தங்கவேல் கூறியதாவது:எம்.ஜி.ஆர்., ரசிகன் என்று சொல்வதை விட, 'வெறியன்' என்று தான் சொல்ல வேண்டும்.அந்த அளவு, அவர் மீதும், அவரால் உருவாக்கப் பட்ட, அ.தி.மு.க., மீதும் பற்று, பாசம் கொண்டுள்ளேன்.
அவர் நடித்த, மர்மயோகி முதல், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை, ஒவ்வொரு படத்தையும், நானும், மனைவியும், 10 முறைக்கு மேல் பார்த்துள்ளோம்.தற்போது வறுமையால், வேறு வழியின்றி, சேகரித்து வைத்திருந்த, 3 லட்சத்துக்கும் மேலான படங்களை விற்று வருகிறேன். முதியோர் உதவித்தொகை கேட்டு, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களிடம் மனு அளித்தும் கிடைக்கவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.'எம்.ஜி.ஆர்., நினைவு நாளான இன்று, தங்கவேல் போன்ற ரசிகர்களுக்கு, கட்சி, ஆட்சியில் பதவியில் உள்ளவர்கள் உதவ வேண்டும்' என, தொண்டர்கள் வலியுறுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE