'போலீஸ் உங்கள் நண்பன்' என்பதற்கு, மாவட்ட ஏ.டி.எஸ்.பி., அனிதாவும் ஒருவர். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில், தனிக்கவனம் செலுத்துவதே காரணம். கோவை மாவட்டம் தவிர, பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைக்கும் பெண்களுக்கும், இவர் உதவிக்கரம் நீட்டுகிறார். அத்துடன், அப்பெண்களுக்கு உரிய தீர்வு கிடைக்கிறதா என்பதையும், தொடர்ந்து கண்காணிக்கிறார்.இதோ அவருடன்...!
பெண்களுக்கு எதிரான குற்றங்களை, தெரிவிப்பதில் இருந்த தயக்கம் மாயமாகி விட்டதா?
சில ஆண்டுகளுக்கு முன், நமக்கு எதற்கு வம்பு என, பெண்கள் தயக்கம் காட்டினர். தற்போது அந்த பயம் இல்லை. பலர் தைரியமாக முன்வந்து புகார் தெரிவிக்கின்றனர். தங்களது அடையாளம் வெளியில் தெரிந்துவிடும் என்ற தயக்கம் மட்டுமே உள்ளது. அடையாளத்தை வெளிப்படுத்தாமல், பாதுகாப்பு அளிப்பதால் தயக்கம் குறைந்து, ஆன்லைன் மற்றும் போன் மூலம் புகார் தெரிவிக்கின்றனர். நேரில் புகார் சொல்ல தயக்கம் காட்டுகின்றனர்.
புகார் செய்ய வரும் பெண்களுக்கு, போலீசார் என்ன பாதுகாப்பு அளிக்கின்றனர்?
அவர்களின் அடையாளங்கள், வெளியில் செல்லாது என்பது உறுதி. அவர்களுக்கு விருப்பமில்லை எனில், குற்றவாளிகள், எதிர்தரப்புவாதிகள் முன், பெண்களை விசாரிப்பதில்லை. குற்றவாளிகளை தனியாகதான் விசாரிக்கிறோம். பாதிக்கப்பட்ட பெண் விருப்பப்பட்டால் மட்டுமே, குற்றவாளியிடம் பேச அனுமதிக்கப்படுவார்.குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் வந்த, 24 மணி நேரத்தில் தீர்வு காண, எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார். எந்த மாவட்டத்தில் இருந்து அழைப்பு வந்தாலும், அந்த மாவட்டத்துக்கு தகவல் தெரிவித்து, தொடர்ந்து கண்காணிக்கவும் செய்கிறோம்.
போக்சோ சட்டம் உங்களுக்கு உதவியாக உள்ளதா?
நிச்சயமாக! போக்சோ சட்டம் என்றாலே, 18 வயதுக்கு குறைவான இருபாலருக்கும் சமமான சட்டமே. குழந்தைகளுக்கு எதிரான, அனைத்து வன்முறைகளுக்கும் இச்சட்டம் பொருந்தும். குழந்தைகளை தவறாக பார்த்தாலோ, பின் தொடர்ந்தாலோ, தொட்டாலோ, பாலியல் ரீதியாக துன்புறுத்தினாலோ, அக்குற்றம் போக்சோ சட்டத்தின் கீழ் வரும். இதனால் எளிதில் நடவடிக்கை எடுக்கமுடிகிறது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு, சட்டத்தில் என்ன மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது?
பெண்களிடம் தவறாக பேசுவது, தவறான கண்ணோட்டத்தில் புகைப்படம், வீடியோ எடுத்தல், பின் தொடர்தல் உள்ளிட்டவற்றுக்கான சட்டங்களில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு அதிகரித்துள்ளது.
பெண்கள் சமூக வலைதளங்களில், கவனமுடன் இருக்க என்ன செய்ய வேண்டும்?
சமூக வலைதளங்களை பார்க்கும், அனைவரின் பார்வையும் ஒரே மாதிரி இருக்காது. அதனால், சமூகவலைதளங்களில் பெண்கள் தங்களது புகைப்படங்களை, பதிவிடுவதை தவிர்க்க வேண்டும். தனது தனிப்பட்ட விஷயங்களை பகிரக்கூடாது. உதாரணத்துக்கு, தினமும் அவர் எங்கு செல்கிறார், யாரை பார்க்கப் போகிறார் என்ற தகவல்களை வெளிடுவதை, தவிர்க்க வேண்டும். குற்றம் செய்ய நினைப்பவருக்கு, இது வசதியாகி விடுகிறது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த புகார்களுக்கு, யாரை தொடர்பு கொள்வது?
காவலன் செயலி, கட்டுப்பாட்டு அறை எண், 100 ஆகியவற்றை எப்போது வேண்டுமானாலும் அழைக்கலாம். மாவட்டத்தில், காவலன் செயலி பெண்களிடம் அதிகளவில் சென்றடைந்துள்ளது. பாதுகாப்பு கோரி யாரும் இதுவரை அழைக்கவில்லை. தினமும் இந்த செயலியில் வரும் அழைப்புகளை, கண்காணித்து வருகிறோம். ஆன்லைன் மூலம் பலர், பெண் அதிகாரிகளின் எண்ணை பார்த்து அழைக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE