வடவள்ளி : இடையர்பாளையத்தில், சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 8,850 கிலோ ரேஷன் அரிசியை, வழங்கல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இடையர்பாளையம், வடவள்ளி ரோடு, கே.கே.நகர், இரண்டாவது வீதியில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, வழங்கல் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.பேரூர் வட்ட வழங்கல் அலுவலர் வைரமுத்து மற்றும் உதவி பங்கீட்டு அலுவலர் சகுந்தலாமணி தலைமையிலான அதிகாரிகள் இணைந்து, அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது, சிமென்ட் ஷீட் போடப்பட்டிருந்த இரண்டு அறைகளில், 132 மூட்டைகளில் தலா 50 கிலோ வீதம், மொத்தம், 6,600 கிலோ பொதுவிநியோக திட்ட புழுங்கலரிசியும், 45 மூட்டைகளில், தலா 50 கிலோ வீதம், 2,250 கிலோ பச்சரிசி மாவும் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
முதற்கட்ட விசாரணையில், சேகர் என்பவர் அறையை வாடகைக்கு எடுத்து, 8,850 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் பொருட்களை, பூசாரிபாளையத்தில் உள்ள உணவு பொருட்கள், சேமிப்பு குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டது.விசாரணை நடத்தி மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என, வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒவ்வொரு முறையும் இப்படித்தான் கூறுகின்றனர். ஆனால், கடத்தலுக்கு துணை நிற்கும் அதிகாரிகள், ரேஷன் கடை ஊழியர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.கவனிங்க கலெக்டரே!கோவை மாவட்டத்தில், ரேஷன் அரிசிகளை பதுக்குவதும் கடத்துவதும், தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கூட்டுறவு அதிகாரிகள் மற்றும் ரேஷன் கடை ஊழியர்களின் துணையின்றி, ரேஷன் அரிசியை பதுக்குவது சாத்தியமில்லை.
உரிய விசாரணை மேற்கொண்டு, ரேஷன் அரிசியை பதுக்கியவர் மற்றும் அதற்கு உதவி செய்தவர்கள் மீதும், கலெக்டர் கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, பதுக்கலையும் கடத்தலையும் தடுக்க முடியும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE