கோவை : கோவை மாநகராட்சி பகுதியில் மேலும், 11 ஆயிரம் சாலையோர வியாபாரிகளுக்கு, வங்கி கடன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி பகுதியில், 6,169 சாலையோர வியாபாரிகளுக்கு, அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நிவாரணமாக, 1,000 ரூபாய் தமிழக அரசு வழங்கியது. தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்ககம் மூலம், இவர்கள் மீண்டும் தொழில் செய்வதற்காக, வங்கிகள் மூலம் ரூ.10 ஆயிரம் கடனுதவி வழங்க, மத்திய அரசு உத்தரவிட்டது.
இதுதொடர்பாக, நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் பாஸ்கரன், அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி கமிஷனர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'தமிழகத்தில் கூடுதலாக, 2.62 லட்சம் வியாபாரிகள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
தினசரி மார்க்கெட், பூங்கா, ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட், கோவில் அருகே மற்றும் பஜார் பகுதிகளில் வியாபாரிகளை அடையாளம் கண்டு, வங்கி கடன் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்' என கூறியுள்ளார்.கடந்த சில மாதங்களில், கோவை மாநகராட்சி பகுதியில் எடுத்த ஆய்வில், 8,000 வியாபாரிகள் இருப்பது தெரியவந்தது. அதில், 6,336 வியாபாரிகளின் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன. இதில், 3,900 பேருக்கு கடன் வழங்க பரிந்துரைக்கப்பட்டது. மத்திய அரசு வலியுறுத்துவதால், கூடுதலாக, 11 ஆயிரம் பேரை, இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE