கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம். கடமையிருந்தால் வீரனாகலாம். பொறுமையிருந்தால் மனிதனாகலாம். இந்த மூன்றுமிருந்தால் தலைவனாகலாம்.இதை சினிமாவில் பாடியதுடன் வாழ்ந்தும் காட்டியவர் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., இன்று அவரது நினைவு நாள். அவர் மறைந்து 32 ஆண்டுகளுக்கு மேலானாலும் கூட மக்கள் மனங்களிலிருந்து மறையவில்லை என்பது உண்மை. 1955 முதல் 1987 வரை அவருடன் மெய்க்காப்பாளனாக இருந்தவன் என்ற முறையில் அவருடன் வாழ்ந்த நாட்களை நினைவில் கொண்டு எஞ்சிய நாட்களை கழித்து வருகிறேன்.
சிறிய வயதில் வறுமையின் கொடுமையை உணர்ந்ததால் தான் அவர் மறையும் வரை காண சென்ற யாரையும் சாப்பிடாமல் திருப்பி அனுப்பியதில்லை. முதல்வரானதும் மதிய உணவு திட்டத்தை சத்துணவு திட்டமாக மாற்றினார். இதன் மூலம் பள்ளி மாணவர்களுக்கு சத்தான உணவு கிடைத்ததுடன், பள்ளிக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தது. அவர் மறையும் வரை தமிழகத்தில் நதிநீர் பங்கீடு, அண்டை மாநிலங்களுடன் சண்டை சச்சரவுகள் வந்ததில்லை. எம்.ஜி.ஆர்., குறித்து எல்லா தகவல்களும் வெளி வந்துள்ளன. இருப்பினும் கூட என் நினைவுகளில் உள்ள சில வெளிவராத விஷயங்களை பகிர்ந்து கொள்வதில் பரவசமடைகிறேன்.
வள்ளுவர் காட்டிய கண்ணியம்
எம்.ஜி.ஆரை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதே நேரம் எம்.ஜி.ஆருக்கு பிடிக்காதவர்கள் என சிலர் இருந்தது உண்டு. அவர்களில் சிலர் எம்.ஜி.ஆருடன் பழகி கொண்டே அவர் மீதுள்ள பொறாமை, காழ்ப்புணர்ச்சி காரணமாக அவரை பற்றி மற்றவர்களிடம் விமர்சிப்பதுண்டு. வேறு ஏதேனும் வழிகளில் எம்.ஜி.ஆருக்கு பிடிக்காத செயல்களை செய்வதுண்டு. இது எம்.ஜி.ஆருக்கு தெரியாது என அவர்கள் நினைப்பதும் உண்டு. ஆனால் இதை தெரிந்து கொண்டாலும் கூட அவர்கள் ஏமாறக்கூடாது என்பதற்காக எம்.ஜி.ஆர்., தெரியாதது போல காட்டிக் கொள்வார். வேறு யாராக இருந்தாலும் அந்த நபர்களை பழிவாங்க காத்திருப்பர். ஆனால் எம்.ஜி.ஆர்., அதனை மறந்து விடுவார். அதே வேளையில் அப்படிப்பட்டவர்கள் எங்காவது அல்லது ஏதேனும் நிகழ்ச்சிகளில் எம்.ஜி.ஆரை சந்திக்க வரும்போது, அவர்களை காண விரும்பாது தவிர்த்து விடும் வகையில் அருகேவுள்ள மற்றொருவரிடம் நலம் விசாரித்து சம்பந்தப்பட்ட நபரை காணாதது போல சென்று விடுவார். நலம் விசாரித்த ஆள் எம்.ஜி.ஆருக்கு பரிச்சயம் இல்லாதவராக இருப்பார். அவர் எம்.ஜி.ஆர்., நலம் விசாரித்த உற்சாகத்தில் மிதப்பார். ஆனால் ஏமாற்றமடைந்தவர் தன்னை தவிர்த்து விட்டதை எண்ணி வருத்தமடைவார். இதுபோல வருத்தமுற்றவர்கள் பிறகு தன் தவறை உணர்ந்து திரும்பி வரும் போது அவர்களை எம்.ஜி.ஆர்., ஏற்றுகொள்வதும் உண்டு.
உணவு விஷயத்தில்
உணவு விஷயத்தில் எம்.ஜி.ஆர்., உயர்ந்த குணம் கொண்டிருந்தார். யாரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது எங்காவது எம்.ஜி.ஆர்., சென்றால் சாப்பிடுபவர் எம்.ஜி.ஆருக்காக மரியாதை கொடுக்க எழுந்து நிற்க முயல்வார். ஆனால் எம்.ஜி.ஆர்., அதை விரும்பமாட்டார். மாறாக அப்படி செய்பவர்களிடம் எம்.ஜி.ஆர், ''நாம் எந்நேரமும் உழைப்பது என்பது இந்த உணவிற்காக தான். அத்தகைய உணவிற்கு மரியாதை கொடுக்க வேண்டும். எனக்கு மரியாதை வேண்டாம். சாப்பிடும் போது யாருக்காகவும் இடையில் நிறுத்த கூடாது,'' என கூறுவதை கேட்டுள்ளேன்.மேலும் தான் சாப்பிடும் உணவு தன்னுடன் இருப்பவர்களும் சாப்பிட வேண்டும் என எண்ணுபவர் அவர். மற்றவர்களின் பசி உணர்வை அவர் பொறுக்கமாட்டார். எங்கு சென்றாலும் மற்றவர்களுக்கு உணவு தேவை என அறிந்தால் அதற்கு ஏற்பாடு செய்து விடுவார்.1972ல் எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.,வை துவக்கிய காலகட்டம். தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் செய்து கட்சி துவங்குவது குறித்து கருத்து கேட்டு கொண்டிருந்தார். அவர் ஒரு ஊரில் மதியம் 2:00 மணிக்கு மதிய உணவுக்கு செல்வதாக திட்டம் இருக்கும். ஆனால் வழிநெடுகிலும் மக்கள் அளிக்கும் வரவேற்பால் அது மாலை ஆகிவிடும்.
பந்திக்கு முந்த வேண்டாமா
கும்பகோணத்தில் அந்த காலகட்டத்தில் காலை 10:00 மணிக்கு சுற்றுபயணத்தை துவக்கிய எம்.ஜி.ஆர்., மதிய உணவுக்கு பட்டுக்கோட்டை செல்வதாக திட்டம். ஆனால் மக்களின் உற்சாக வரவேற்பால் மாலை தான் அங்கு செல்ல முடிந்தது. பட்டுக்கோட்டையில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் எம்.ஜி.ஆருக்கு தனி அறையில் சாப்பாடு வழங்க ஏற்பாடு செய்தனர். உடன் சென்றவர்களுக்கு அருகிலுள்ள ஹாலில் தரையில் அமர்ந்து சாப்பிடுவது போல ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் அதை கவனித்து விட்ட எம்.ஜி.ஆர்., உடன் சென்றவர்களுடன் தரையில் அமர்ந்து சாப்பிட இருந்தார். அருகில் அமர்ந்திருந்த என்னிடம், நம்ம கதிரேசன், ஆறுமுகம் இவங்களை பந்தியில் காணோமே என கேட்டார். அவர்கள் இருவரும் அருகில் இருந்த குழாயில் முகம் கழுவ சென்றிருந்தனர். இதில் கதிரேசன் கார் டிரைவர்.
ஆறுமுகம் போட்டோகிராபர். அவர்களை கண்டதும் எம்.ஜி.ஆர்., ''எங்கேப்பா போனீர்கள், பசிக்கவில்லையா, பந்திக்கு முந்திக் கொள்ள வேண்டாமா. தற்போது ஊர்க்காரர்கள் உட்கார்ந்து விட்டார்களே. சரி நான் உங்களுடன் சாப்பிடுகிறேன்,'' என எழுந்து விட்டார். உடனே பந்தியில் இருந்த உள்ளூர்க்காரர்கள் தலைவரே நாங்கள் உங்களுடன் அமர்ந்து சாப்பிடலாம் என இருந்தோம். முதலில் நீங்கள் சாப்பிடுங்கள் என அனைவருக்கும் இடம் அளித்தனர். அந்தளவுக்கு தன்னுடன் வருவோர் பசி பொறுக்க மாட்டார்கள், மேலும் தனக்கு அளிக்கும் பிரத்யேக உணவு அடுத்த பந்தி யில் இருக்குமோ இருக்காதோ என உயர்ந்த எண்ணம் எம்.ஜி.ஆருக்கு எப்போதுமே இருக்கும்.
எம்.ஜி.ஆரால் கிடைத்த சம்பளம்
ஒரு முறை எம்.ஜி.ஆர்., நடித்த விக்கிரமாதித்தன் படத்தில்ஒரு சண்டை காட்சி வாஹினி ஸ்டூடியோவில் படம் எடுக்கப்பட்டது. அந்த காட்சிகளில் நான் உள்ளிட்ட சில ஸ்டென்ட் நடிகர்கள் நடித்திருந்தோம். அந்த காலத்தில் தயாரிப்பாளரிடம் நேரடியாக பேசி சம்பளத்தை பெறுவோம். அதன்படி தயாரிப்பாளரிடம் கேட்ட போது ஒரு வாரத்தில் சம்பளம் கொடுப்பதாக தெரிவித்தார். அதன்படி சம்பளத்தை கேட்க சென்ற போது மேலும் ஒரு மாதம் கழித்து தருவதாக தெரிவித்தார். அந்த நேரத்தில் எம்.ஜி.ஆர்., மனைவி சதானந்தவதி மறைந்து இரண்டு மாதங்கள் ஆகியிருந்த காலம்.
இதனால் எம்.ஜி.ஆரிடம் சொல்லாமல் இருந்த சம்பள விவகாரத்தை வேறுவழியின்றி அவரிடம் தெரிவித்தோம். மனைவி இறந்த துக்கத்திலும் கூட இவ்வளவு நாட்களாக ஏன் கூறவில்லை என கேட்டு, தயாரிப்பாளரிடம் போனில் சம்பளம் தராததற்காக கடிந்து கொண்டார்.
எம்.ஜி.ஆரே போன் செய்ததால் வேறுவழியின்றி தயாரிப்பாளரும் தன் உதவியாளர் மூலம் சம்பளத்தை கொடுத்து அனுப்பினார். இப்படி எம்.ஜி.ஆர்., எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என செயல்பட்டார். அதனால் தான் அவர் மறையும் வரை முதல்வராக வைத்து தமிழக மக்கள் அழகுபார்த்தனர்.-கே.பி.ராமகிருஷ்ணன் எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளர் சென்னை. 99406 59300
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE