கோவை : கோவை, காந்திபுரம் மற்றும் கிராஸ்கட் ரோட்டில், பாதசாரிகள் பாதுகாப்பாக பயணிக்க, எத்தகைய மாற்றங்கள் செய்யலாம் என்கிற 'டிசைன்' தயாரிக்கப்பட்டு உள்ளது.
'ஸ்மார்ட் சிட்டி' திட்டங்கள் செயல்படுத்தும் கோவை மாநகராட்சிக்கு, ஜெர்மனி அரசு நியமித்துள்ள, ஜி.ஐ.இசட்., அமைப்பினர் தொழில்நுட்ப ஆலோசனை வழங்கி வருகின்றனர்.வாகனங்கள் செல்வதற்கு மட்டும் சாலையல்ல; பாதசாரிகள், சிறுவர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், சாலையோர வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும், ஏற்றதாக அமைந்திருக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன், மாநகராட்சி பொறியாளர்களுக்கு, கடந்த இரு நாட்களாக பயிற்சி அளித்தது.
களப்பயிற்சியாக, 30 அதிகாரிகள், 10 குழுக்களாக பிரிக்கப்பட்டு, நகரின் பல்வேறு ரோடுகளின் தற்போதைய நிலையை ஆய்வு செய்ய நேற்று அனுப்பினர்.நடைபாதை இருக்கிறதா; ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளதா; வாகனங்கள் நிறுத்தியிருக்கிறார்களா; மாற்றுத்திறனாளிகள் செல்ல வசதி இருக்கிறதா; ரோட்டை கடந்து செல்ல வசதி இருக்கிறதா; ரோட்டின் இருபுறமும் நடைபாதை உள்ளதா என கண்டறிந்து குறிப்பெடுத்தனர்.
அதன் பின், ஓட்டலில் நடந்த பயிற்சி முகாமில், ஒவ்வொரு குழுவிடம் இருந்தும், களஆய்வில் பார்த்த விஷயங்கள் எழுதி வாங்கப்பட்டன. அதன்பின், பாதுகாக்கப்பட்ட சாலையை உருவாக்குவது எப்படி என பயிற்சி அளிக்கப்பட்டது.குறிப்பிட்ட வீதிகளில், பாதசாரிகளின் பாதுகாப்பான பயணத்துக்கு என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என, பயிற்சி முடிவில், மாநகராட்சிக்கு பரிந்துரை செய்வோம்.
முதல்கட்டமாக, காந்திபுரம் சந்திப்பு மற்றும் கிராஸ்கட் ரோட்டில் எத்தகைய மாற்றங்கள் உருவாக்கலாம் என்கிற, 'டிசைன்' தயார் செய்திருக்கிறோம். பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அமல்படுத்த, மாநகராட்சி உயரதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறோம்.- ரஞ்சித், ஒருங்கிணைப்பாளர்,ஜி.ஐ.இசட்., அமைப்பு
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE