மதுரை:எஸ்.ஐ., பணிக்கான தற்காலிக தேர்வு பட்டியல் மற்றும் அதனடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன் தாக்கல் செய்த மனு:நான் பிளஸ் 2 மற்றும் பட்ட படிப்பை, தமிழ் வழியில் முடித்தேன். எஸ்.ஐ., பணி தேர்விற்கு, 2019, மார்ச், 8ல், சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.எழுத்து, உடல் தகுதி தேர்வு, நேர்காணல் அடிப்படையில், தேர்வு நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஜன., 12ல் நடந்த எழுத்து தேர்வில், 70க்கு, 51 மதிப்பெண்கள் பெற்றேன். உடல் தகுதி தேர்வில், 15க்கு, 12 மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.நேர்காணலுக்கான தற்காலிக தேர்வு பட்டியல் டிச., 1ல் வெளியானது. அதில் என் பெயர் இல்லை. தேர்வு நடைமுறைகளில், தமிழ் வழியில் படித்தோருக்கான இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்றவில்லை. இதனால், என்னை போன்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு நடைமுறைகளில் உள்ளது போல், எஸ்.ஐ., பணிக்கான மூன்று கட்ட தேர்வின் ஒவ்வொரு நிலையிலும், தமிழ் வழியில் படித்தோருக்கான இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும். தமிழ் வழியில் படித்தோருக்கான இட ஒதுக்கீட்டை, எஸ்.ஐ., பணிக்கான ஒட்டுமொத்த தேர்வு நடைமுறையிலும் பின்பற்ற வேண்டும்.
தற்காலிக தேர்வு பட்டியல் மற்றும் அதனடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டார்.நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு, 'தற்காலிக தேர்வு பட்டியல் மற்றும் அதன் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க, இடைக்கால தடை விதிக்கப்படுகிறது' என்றது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE