பொள்ளாச்சி:இறந்த யானையின் தந்தங்களை கடத்தி, விற்க முயன்ற, ஆறு பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி நா.மூ.சுங்கத்தில் உள்ள, 'பெட் ஷாப்'பில், யானை தந்தங்கள் பதுக்கி வைத்திருப்பதாக, மத்திய வன உயிரின குற்ற தடுப்பு குழுவுக்கு தகவல் வந்தது. வனத்துறை அதிகாரிகள், மத்திய வன உயிரின குற்ற தடுப்பு குழுவினர், சோதனை செய்தனர். இதில், இரு தந்தங்கள் பதுக்கியது தெரிந்தது. கடை உரிமையாளர் மணிகண்டன், 38, என்பவரிடம் விசாரித்தனர்.
தொடர்ந்து, அங்கலக்குறிச்சியைச் சேர்ந்த வேட்டை தடுப்பு காவலர் சாமியப்பன், 30, தற்காலிக பணியாளர் காத்தவராயன், 40, மேலும் மூவர் என, ஆறு பேரை கைது செய்தனர்.வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:வெடிக்காரன்பாளையத்தில், 15 வயது ஆண் யானை, இரண்டு மாதங்களுக்கு முன் இறந்தது. ரோந்து பணி சென்ற சாமியப்பன், காத்தவராயன், யானை இறந்த தகவலை வனத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கவில்லை.இருவரும், இறந்த யானையின் இரண்டு தந்தங்களை எடுத்து, இடைத்தரகர் வாயிலாக, 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்றுள்ளனர். வேட்டை தடுப்பு காவலர், தற்காலிக பணியாளர் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE