அவிநாசி : அவிநாசி, வட்டார வேளாண்மை விரிவாக்க அலுவலகம் ஒட்டியுள்ள ரோட்டோரம், அதிகரித்து வரும் கடைகளால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது.
அவிநாசி - சேவூர் ரோட்டில், வட்டார வேளாண்மை விரிவாக்க மைய கட்டடத்தை ஒட்டியுள்ள ரோட்டோரம், கடந்த, ஒன்பது ஆண்டுகளுக்கு முன், 3 விவசாயிகள் மட்டும், காய்கறி கடை வைத்து வியாபாரம் செய்து வந்தனர். நாளடைவில் அந்த இடம், 'உழவர் சந்தை' என்றானது.அடுத்தடுத்து காய்கறி கடைகள் முளைக்க துவங்கின; இதனால், நெரிசலும் அதிகரிக்க துவங்கியது.
அப்பகுதி முழுக்க காய்கறி கடைகளால் சூழப்பட்டது. கொரோனா ஊரடங்கு நேரத்தில், பேரூராட்சி மார்கெட்டில் வியாபாரம் செய்து வந்த பலர், இந்த இடத்தில் கடை வைத்தனர்.கொரோனா காலகட்டம் என்பதால், அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. தற்போது, 20க்கும் மேற்பட்ட கடைகள் அங்கு உள்ளன. இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது; விபத்து அபாயமும் உள்ளது.
இச்சூழலில், புதிய பஸ் ஸ்டாண்ட் பின், பேரூராட்சி மார்கெட் வளாகத்தில், தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள், 'வேளாண் அலுவலகம் அருகில், உள்ள கடைக்காரர்களால், தங்களது வியாபாரம் பாதிக்கப்படுவதால், தங்களையும் அதே இடத்தில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும்' என, பேரூராட்சி நிர்வாகத்தினரிடம், முறையிட்டுள்ளனர்.
பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:வேளாண் துறை அலுவலகத்தை ஒட்டியுள்ள காய்கறி கடைகள், உழவர் சந்தை இல்லை; அவை, ரோட்டோர கடைகளே. வியாபாரிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள பிரச்னையை களைய தாசில்தார் முன்னிலையில், வியாபாரிகள், நெடுஞ்சாலை துறை, போலீசார் என, சம்மந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு நடத்தி, அங்குள்ள கடைகளை அப்புறப்படுத்துவது அல்லது மாற்று ஏற்பாடு செய்வது குறித்து முடிவெடுக்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE