திருப்பூர் : ''வளமான சுற்றுச்சூழலை உருவாக்கிட, நம்மால் இயன்ற அளவு மரம் வளர்க்க வேண்டும்,'' என, பி.எப்., மண்டல கமிஷனர் விஜய் ஆனந்த் பேசினார்.
'வனத்துக்குள் திருப்பூர் -6' திட்டத்தின், 96வது நிகழ்ச்சி, அணைப்பாளையம் லக்ஸ் குழும நிறுவன வளாகத்தில் நேற்று நடந்தது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன, மண்டல கமிஷனர் விஜய் ஆனந்த், அமலாக்க அதிகாரி லோகநாயகி, 'லக்ஸ்' நிறுவனத்தை சேர்ந்த நவீன் டோடி, ராகுல் டோடி குடும்பத்தினர், 'வனத்துக்குள் திருப்பூர்', 'டிரீம் -20', வேர்கள் குழுவினர் பங்கேற்றனர்.
இதில், கமிஷனர் விஜய் ஆனந்த் பேசியதாவது:'வனத்துக்குள் திருப்பூர்' போன்ற பசுமை வளர்க்கும் திட்டம் இல்லாவிடில், அடுத்த 40 ஆண்டுகளில், தமிழகம் பாலைவனமாக மாறி விடும். அந்நிலை ஏற்படுவதை தவிர்க்க, அதிக அளவில் மரம் வளர்க்க வேண்டும்; இயற்கையை பாதுகாக்க வேண்டும்.காடுகளை அழித்தால் உயிரினங்கள் வாழ முடியாத நிலை உருவாகுமென, நமது முன்னோர் கூறியுள்ளனர்.
எதிர்கால சந்ததியினருக்கு, வளமான சுற்றுச்சூழலை உருவாக்கி கொடுக்க, நம்மால் இயன்ற அளவு மரம் வளர்க்க வேண்டும். திருப்பூரை பசுமை மாவட்டமாக மாற்றி வரும், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழுவை பாராட்டுகிறேன்.பனியன் நிறுவனத்தினர், பொதுநல நிதியை, அரசியல்வாதிகளுக்கு நன்கொடையாக வழங்காமல், மரம் வளர்ப்பு, மழைநீர் சேகரிப்பு போன்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிக்கு பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE