திருப்பூர்:திருப்பூர் கோவில்வழியில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைத்த பணியில், 2 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக, லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.
திருப்பூர் கோவில்வழி பகுதியில், தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைத்த வகையில், 2 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளதாக, திருப்பூர்-பாளையக்காட்டை சேர்ந்த ரவிச்சந்திரன், லஞ்ச ஒழிப்பு இயக்குனருக்கு மனு அனுப்பி உள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:கோவில்வழி தற்காலிக பஸ் ஸ்டாண்டில், 11 பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதை மூன்று ஒப்பந்த புள்ளிகளில், 24 பணிகளாக அறிவித்து, பணியின் மதிப்பை குறைத்து, செய்யப்பட்டுள்ளது.
முக்கியமாக, 24 பணிகளில், 17 பணிகளை ஒரே நபர் ஒப்பந்தம் எடுத்துள்ளார். அதில், தார் தளம் முறையாக அமைக்காமல் அதில் முறைகேடு நடந்துள்ளது. ஒப்பந்த புள்ளி கோரப்பட்டதில் உரிய நடைமுறை பின்பற்றப்படவில்லை. மாநகராட்சி அலுவலர்கள், 2 கோடி ரூபாய் முறைகேடு செய்துள்ளனர். உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.
கமிஷனர் விளக்கம்
முறைகேடு குறித்து, மாநகராட்சி கமிஷனர் சிவகுமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:கோவில்வழி தற்காலிக பஸ் ஸ்டாண்ட் பணி, அரசு வழிகாட்டுதல் முறைப்படியும், முறையான ஒப்பந்த புள்ளி பெற்றும் உரிய ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டது. முறையாக டெண்டர் கோரப்பட்டு 4, 5 ஒப்பந்தாரர்கள் டெண்டர் சமர்ப்பித்து, குறைந்த விலைப்புள்ளிக்கு ஆணை வழங்கப்பட்டது. இதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. மொத்தம், 31 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொது நிதியில், 3.58 கோடி ரூபாய்க்கு திட்டமிட்ட பணி, அடுத்தடுத்த தேவை காரணமாக, 4.5 கோடி ரூபாய் என திட்ட செலவு அதிகரித்தது.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE