நாத இன்பம் சபாவும், 'பரிவாதினி' எனும், சேவை வழங்கு மையமும் இணைந்து, ஆண்டுமுழுதுமே, இசை கச்சேரிகளை, வீட்டில் இருந்தபடியே ரசிக்க, ஏற்பாடுகள் செய்து வந்திருக்கின்றன.
இதில், 'பரிவாதினி' இணையம் வாயிலாக, கலைஞர்களுக்கும் ரசிகர்களுக்கும் இடையேயான, ஒரு மேலான தொடர்பை ஏற்படுத்தியுள்ள, ஒரு முன்னோடி நிறுவனம்.நாத இன்பம் நமக்களிக்கும் கச்சேரிகளில், சமீபத்தில் பாடினார் சுபஸ்ரீ. இவர், 'மணிரங்கு' ராகத்தை ஆலாபனைக்கென தேர்ந்தெடுத்து, ராகபாவத்தை உன்னதமாக கொண்டு வரும், ஒரு விஸ்தாரத்தை அளித்தார். சாமானியமாக, அனைவரும் எடுத்துக் கொள்ளாத ராகம் இது. இதற்கான கிருதி, சுவாதித் திருநாளின் 'ஜயஜய பத்மநாப...' என்பது.கச்சேரியில் இரண்டாவதாக அளித்த, 'சோபில்லு ஸப்தஸ்வர...' பாடலுக்கான ஸ்வரக் கோர்வையில் 'க க ம ம ப ப நி நி ஸ ஸ க' என்றும், அதைப் போலமைந்த இன்னும் பல பிரயோகங்களை, அடுத்தடுத்து வழங்கினார்.இவை, 'சங்கீத கலாநிதி' ராமநாதன் தொட்டு, சவுமியா வழியாக, சுபஸ்ரீயை வந்தடைந்துள்ளது என்று புரிந்து கொள்ளலாம்.
ஒரு தலைமுறையில் இருந்து, வரும் தலைமுறைக்கான நல்ல ஞானப் பரிமாற்றமே இது!சுபஸ்ரீ சவுமியாவின் மாணவி. 'காயகப்ரியா' ராகத்தில், 'நாதநிலை கண்டுருக நான்...' என்ற, கோடீஸ்வர அய்யரின் பாடலை, சுபஸ்ரீ நல்ல நெறியுடன் பாடினார். கோடீஸ்வர அய்யரின் சிறப்பு அவர், 72 மேளகர்த்தா ராகங்களிலும் கீர்த்தனைகளைத் தமிழில் இயற்றியுள்ளார் என்பதே.'சாமாவும் கல்யாணியும்' ராக ஆலாபனைக்கென, சுபஸ்ரீ எடுத்தாண்ட மற்ற ராகங்கள். இதில், கல்யாணியை மெயின் என்று கருதலாம்.
இந்த ராக ஆலாபனையின் போதும், இதற்கு முன்னர் வந்த சாமாவின் போதும், எந்த அளவிற்கு, ராகங்கள் மனதினுள் பிரவேசித்து பதிந்துள்ளன என்பதே நன்றாக வெளிப்பட்டது.சாமா ராகத்திற்கான பாடல், 'குருகுஹாய பக்தானுக்ரஹாய...' என்பது, கல்யாணிக்கு 'பஜரே ரேசித்த...' முந்தையது தீக்ஷிதருடையது, இரண்டாவதன் ஆசிரியர் தியாகராஜர். வயலினிழைத்த சாய் ரக்ஷித்தும் இளைய தலைமுறையைச் சார்ந்தவரே. இவரும் சாமா மற்றும் கல்யாணி ராகங்களை, அனுபவித்து வாசித்தார்.
கல்பனா ஸ்வரங்களில் இவற்றின் சேர்க்கைகளை சுபஸ்ரீ அளித்ததைப் பின்பற்றி, பின் அதை தன்வயப்படுத்தி வாசித்தார்.சவுமியாவின் மாணவியாயிற்றே? காவடிச் சிந்து இல்லாமலா! 'அழகு தெய்வமாக வந்து...' என்ற பாடல் மூலம் இது நமக்கு தரப்பட்டது.இவ்விடத்தில் லயத்துக்காக உடன் வாசித்த மிருதங்கத்தில் என்.சி.பரத்வாஜும், கஞ்சிராவில் ஹரிஹர சர்மாவும் மிகுந்த உற்சாகத்துடன் பாடலின் போக்கிற்கு உகந்தபடியெல்லாம், தங்கள் நடைகளை மாற்றி வாசித்து சிறப்பித்தனர்.
இவர்கள் இருவரும், தனியின் போது கொடுக்கப்பட்ட நேர அவகாசத்தில், தங்களது முழுத் திறமைகளும் வெளிப்படும் வண்ணம் கோர்வைகளையும் குறைப்புகளையும் வழங்கியது, பாராட்டும்படியாக இருந்தது.
- எஸ்.சிவகுமார்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE